திவ்ய பிரபந்தம்

Home

2.7.7 குடங்கள் எடுத்து ஏற விட்டு

குடங்கள் எடுத்து ஏற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே, * மடம் கொள் மதி முகத்தாரை மால் செய்ய வல்ல என் மைந்தா, * இடந்திட்டு இரணியன் நெஞ்சை இரு பிளவாக முன் கீண்டாய், * குடந்தைக் கிடந்த எம்கோவே குருக்கத்திப் பூச்சூட்ட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.7.7

பல குடங்களை கையில் எடுத்துக் கொண்டும், ஆகாயத்தில் எறிந்ததும் கூத்து ஆடுவதில் சாமர்த்தியசாலியான எங்கள் ஸ்வாமியானவனே, மடப்பத்தை உடையவர்களாய், பூரண சந்திரனைப் போல குளிர்ந்த முகத்தை உடைய பெண்களை மயக்க வல்ல என் பிள்ளையானவனே, முற்காலத்தில் ஹிரண்யாசுரனுடைய மார்பை திருவுகிர்களாலே ஊன்றி இடந்து இரண்டு பிளவு ஆகும்படி கிழித்துப் போட்டவனே, திருக்குடந்தையில் கண் வளர்ந்து அருளுகிற என் அரசே, குருக்கத்தி பூ சூட்ட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பிராமணர்களுக்கு செல்வம் அதிகம் கிடைத்தால், யாகம் செய்வார்கள். அது போல இடையர்களுக்கு அதிக செல்வம் கிடைத்தால் அவர்கள் குடகூத்து ஆடுவார்கள். தலையிலே அடுக்கிய குடம் இருக்க, இருதோள்களிலும் இருகுடங்களிருக்க, இருகையிலும் குடங்களை ஏந்தி ஆகாசத்திலே எறிந்து ஆடுவது குட கூத்து ஆகும். இவனுக்கு இந்த உலக ஐஸ்வர்யங்கள் போல இல்லாமல், அவன் அவதரித்து (பிறந்து) படைத்த ஐஸ்வர்யம் ஆகும். இடையர்களுக்கு உள்ள ஐஸ்வர்யம் மிக அதிகமான பசுக்கள் கூட்டம் ஆகும். அதில் இவனுக்கு அந்த குறையே இல்லாததால் வந்த செருக்கு ஆகும். அதனால் இவன் குட கூத்து ஆடுகிறான் என்கிறார். இந்த கூத்து ஆடுவர் வேறு பலர் இருந்தாலும், இவன் ஆடியதைப் போல வேறு ஒருவரும் ஆடவில்லை என்றும், பரத சாஸ்திரத்திலும் காண அரிதாகும் என்கிறார்.

முழு சந்திரன் போன்ற அழகிய முகத்தை உடைய பெண்களை மயக்கவல்ல கண்ணா, நரசிம்ம அவதாரத்தில் தேவர்கள் கொடுத்த வர பலத்தாலே பெருகி இருக்கின்ற இரணியனுடைய மார்பை கொலைக்கையாளன் நெஞ்சு இடந்த கூருகிராளன் (பெரிய திருமொழி, 1.7.2) என்கிறபடி, திருவுகிர்களால் ஊன்றி இடந்து, இரு பிளவாக முற்காலத்தில் பிளந்தவனே, என்று சொல்லி, அதனால் சிறுவனுக்கு ஆபத்திலே வந்து உதவி செய்தவன் என்றும் அதனால் தளர்ந்தாரை நோக்கி அருளுபவன் என்றும் கொள்ளலாம்.

நரஸிம்ம அவதாரம் செய்தவனும், திருக்குடந்தையில் பள்ளி கொண்டு இருப்பவனும் இந்த கண்ணனே என்கிறார்.

Leave a comment