திவ்ய பிரபந்தம்

Home

2.7.10 செண்பக மல்லிகையோடு

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இரு வாட்சி, * எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று இவை சூட்டவா என்று, * மண் பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம் மாலை, * பண்பகர் வில்லி புத்தூர்க் கோன் பட்டர் பிரான் சொன்ன பத்தே.

பெரியாழ்வார் திருமொழி 2.7.10

செண்பகமும் மல்லிகையுமாகிற இப்பூக்களோடு செங்கழுநீரும் இருவாட்சியும் முதலாக இன்னது இன்னது என்று எண்ணி சொல்லப்பட்ட பூக்கள் எல்லாவற்றையும் தேடிக் கொண்டு வந்தேன்; இந்த புஷ்பங்களை இப்போது சூட்டும்படி வரவேணும் என்று தன்னது என்று சாஸ்த்ர சித்தமான பூமியை மகாபலியிடத்தில் நீர் ஏற்று அளந்து கொண்டவனைக் குறித்து, யசோதைப் பிராட்டி மணம் உகந்து சொன்னவற்றை பண்ணிலே சேரும்படி சொல்கின்ற ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு தலைவரான பெரியாழ்வார் அருளிச் செய்த சொல் மாலையான இவையும் ஒரு பத்தே (என்று இந்த பத்தின் மேன்மையை புகழ்ந்து, இதனுடைய ரசானுபவம் தான் இதற்கு பலன் என்று தோற்ற அருளி செய்கிறார்). இதுவே இந்த பாடலின் பொழிப்புரை. இந்த பத்து பாடலில் ஏதேனும் ஒன்றை யாதேனும் ஒருவர் சொன்னாலும் பலன் உள்ளது என்கிறார்.

காலையில் பூக்கின்ற செண்பகம், செங்கழுநீர், இருவாட்சி முதலான பூக்களும், மாலையில் பூக்கின்ற மல்லிகை இவற்றை எண்ணி சொல்லப்பட்ட பூக்கள் கொண்டு வந்தேன் என்கிறார். அது மட்டும் இல்லாமல் எண்பகர் பூ என்று சொன்னது சாஸ்திரத்தால் இன்னது இன்னது சொல்லப்பட்ட பூ என்று சொல்கிறார்.

சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட செண்பகம், மல்லிகை, செங்கழுநீர், இருவாச்சி முதலிய பூக்களை கொண்டு வந்து இன்று உனக்கு சூட்ட விழைகிறேன், என்று யசோதை பாடிய பாடல்களை, மூவடி தா என்று இவன் கேட்க, தருகின்றேன் என்று மகாபலி சொன்னபடி, மஹாபலியிடம் இருந்து சாஸ்திர சித்தமாக அளந்து பெற்ற இந்த பூமியை கொண்டவனே, என்று பெரியாழ்வார் அருளிய இந்த பத்து பாடல்களையும் பாமாலையாக ஏற்று கொள்வாய் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment