எருதுகளோடு பொருதி ஏதும் உலோபாய் காண் நம்பி, * கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய், * தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு, * பொருது வருகின்ற பொன்னே புன்னைப் பூச்சூட்ட வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.7.6
நப்பின்னை இடத்தில் கொண்ட மோகத்தால், பூர்ணன் என்று ஆனவனே, அவளுக்காக ஏழு அசுரர்கள் உட்புகுந்த காளைகளோடு போர் செய்தாய்; ஒன்றிலும் ஆசை கொண்டு இல்லை; (தேகத்தை பேணுதல், உயிரை பேணுதல் என்று கருத்து.) கம்ஸன் உன் மேல் செய்ய நினத்த தீமைகளை அவன் மேல் செய்து நீ கம்ஸனை உன திருவடிகளைக் கொண்டு உதைத்தாய்; அவனை கொல்வதற்காக போகிற வழியில், வண்ணானை கொன்றதும், வில்லை முறித்ததுமான தீமைகளை செய்து முஷ்டிக சாணூரர்களை நிரந்தரமாக போர் செய்து வருகிற பொன் போன்ற வடிவை உடைய கண்ணனே, புன்னை பூவை சூட்ட நீ வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நப்பினை பிராட்டியை மணக்க ஏழு ரிஷபங்களுடன் போர் செய்தது முன் காலத்தில் இருந்தாலும், ஆழ்வார் தற்போது நடப்பது போல ‘பொருதி’ என்று பாடுகிறார். கம்ஸன் உனக்கு செய்த தீமைகளுக்கு பதிலாக அவன் இருக்கும் உயர்ந்த மஞ்சஸ்தலத்திற்கு குதித்துச் சென்று, அவனுடைய கிரீடங்களை பறித்து எறிந்து, தலைமுடியை பிடித்து இழுத்து, மேல் இருந்து பூமியில் தள்ளி, அவன் மேல் குதித்து அவனை கொன்றதை சொல்கிறார்; ஈரம் கொல்லியான ரஜ்கனை (வண்ணானை) கொன்று, ஆயுத சாலையில் புகுந்தது, வில் விழவிற்கு என்று அலங்காரம் செய்த வில்லை முறித்து, கம்ஸனுக்கு பிரியமான குவலாய பீடம் என்ற யானையை கொன்றது, முதலியவை தெருவின் கண் செய்த தீமைகள். இப்படி விரோதிகளை அழித்ததால் உண்டான செருக்கால் பொன் போன்று இருப்பவனே, புன்னை பூ சூட வா என்று அழைக்கும் பாடல். கம்ஸனை கொன்றது பிரதானம் என்பதால் அதை முன்னே சொல்லிவிட்டு, பிறகு, அதற்கு முன்னால் செய்த தீமைகளை பின்னால் சொல்கிறார்.
Leave a comment