திவ்ய பிரபந்தம்

Home

2.7.5 புள்ளினை வாய் பிளந்திட்டாய்

புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொரு கரியின் கொம்பு ஒசித்தாய், * கள்ள அரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் * அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன், * தெள்ளிய நீரில் எழுந்த செங்கழு நீர் சூட்ட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.7.5

பகாசுரனுடைய வாயை கிழித்துப் போட்டவனே, யுத்தம் செய்ய உன்மேல் எதிர்ந்து வந்த குவலயா பீடம் என்ற யானையின் தந்தத்தை முறித்தவனே, விஷமத்தனமான வேஷம் கொண்டுவந்த சூர்பணகி என்ற ராக்ஷஸியின் மூக்கோடு கூட ராக்ஷஸ ரக்ஷகனான ராவணனுடைய தலைகளை அறுத்து போட்டவனே, நீ வெண்ணையை அள்ளி அமுது செய்யும் போது, அடியேன் உன் திருமேனியின் மார்த்துவத்தை பார்த்தும் அஞ்சாமல் அடித்தேன், (இருந்தும் நான் செய்ததை பொறுத்து) நிர்மலமான நீரில் எழுந்த செங்கழுநீர் என்ற பூவை சூட்ட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கன்றுகள் மேய்க்கின்ற இடத்தில், கள்ள நோக்குடன், பறவை உரு கொண்டு உன்னை அழிக்க வந்த பகாசுரன் என்ற கொக்கின் வாயைக் கிழித்து ஒழித்தவனே!  ‘கல்யாணம்’ என்று ஒரு காரணம் சொல்லி, உன்னை அழிக்க நினத்து, கம்ஸன் நிறுத்தி வைத்த குவலயாபீடம் என்ற யானையின் கொம்பை அநாயசமாக பிடுங்கி எறிந்தவனே, சூர்பணகையின் மூக்கையும் ராவணனின் தலைகளையும் அறுத்து எறிந்தவனே, என்று இவனின் பாராக்கிரமங்களை சொல்கிறார். இப்படி விரோதிகளை அநாயசமாக போக்கி, உன்னை அனுபவிப்பவர்களுக்கு உன்னை உபகரித்தவன் என்கிறார். நீ எது செய்தாலும் உன்னுடைய வல்லமையைக் கண்டு நான் வெறுமனே இருக்க வேண்டியது தான். இருந்தும் அஞ்சாமல் அடித்து விட்டேன்; அவசரப்பட்டு நான் செய்ததைப் பொறுத்துச் செங்கழுநீர்ப் பூச் சூடவா என்கிறாள்.  புஷ்பம் மேலே பட்டாலும் வாடும்படியான உன்னுடைய மிருதுவான தன்மையை கண்டு அஞ்ச வேண்டியது. அப்படி அஞ்சாமல் அடித்ததைப் பொறுத்துப் பூச்சூட வர வேண்டும் என்கிறார்.  

Leave a comment