தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களைத் தீமை செய்யாதே, * மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற, * புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற்கன்று போலே, * உருவம் அழகிய நம்பி உகந்து இவை சூட்ட நீ வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.7.4
புருவங்களும் கறுத்து இருக்கின்ற திருக்குழலும் (இவ்விரண்டுக்கும் நடுவே விளங்குகின்ற) நெற்றியும் (ஆகிய, இந்த அவய அழகுகளால்) விளங்குகின்ற மேகம் பெற்ற கன்று போல் வடிவால் அழகியனாய், சர்வ வித பரிபூரணன் ஆனவனே, வீதியிலே நின்று பருவத்தால் இளைய இடைபெண்களிடத்தில் தீம்பு செய்ய வேண்டாம்; பரிமளம் வீசுகின்ற மருவையும் தவனத்தையும் சேர்த்துக் கட்டின அழகிய இம்மாலைகளை நான் உகந்து சுட்டும் படி நீ வந்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நான் மச்சிலும் மாளிகையிலுமா ஏறி நின்றேன்; தெருவில் தானே நின்றேன் என்று கண்ணன் சொல்ல, அங்கே மட்டும் தானோ நீ தீமை செய்யாமல் இருந்தது, தெருக்களில் தீமை செய்யாதே என்கிறார்கள். சிற்றில் சிதைக்கை, லீலோ உபகரணங்களை பறித்தல், அந்த இளம் பெண்களின் கைப்பிணக்கிடுகை போன்ற விஷயங்கள் இவனுக்கு வழக்கம் ஆகையால், தீமை என்ற ஒரே வார்த்தையால் சொல்கிறார்.
கண்ணன் தெருவிலே நின்று அவ்விடத்தில் விளையாடுகின்ற சிறிய இடைப் பெண்களைத் தீம்பு செய்து திரியாமல், மருகொழுந்தையும் தமனகத்தையும் சேர்த்துக் கட்டின மணம் வீசுகின்ற மாலையை அந்த மணம் கெடாதபடி சூடிக்கொள்ள வா என்கிறாள். உனக்கு சூடப் பெற்றோம் என்று அந்த மாலைகள் உகப்புடன் மணம் கமழகின்றன என்கிறார்.
Leave a comment