திவ்ய பிரபந்தம்

Home

2.7.3 மச்சொடு மாளிகை ஏறி

மச்சொடு மாளிகை ஏறி மாதர்கள் தம்மிடம் புக்கு, * கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகில் இவை கீறி, * நிச்சலும் தீமைகள் செய்வாய் நீள் திருவேங்கடத்து, * எந்தாய் பச்சைத் தமனகத்தோடு பாதிரிப் பூச் சூட்டவாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.7.3

நடு நிலங்களோடு கூட மேல் நிலங்களிலும் சென்று ஏறி, (நடு நிலங்கள் மேலும், மேல் நிலங்கள் மேலும் மேலும் ஏறி என்றபடி) பெண்கள் இருக்கிற இடங்களில் புகுந்து, அவர்கள் முலைக் கச்சு உடன் அதற்கு மேல் ஈடான பட்டுக்களையும் கிழித்து (கச்சையும் பட்டுக்களையும் கிழித்து என்றபடி) நல்ல கரையை உடைய புடவைகளையும் கிழித்து நாள்தோறும் தீம்புகள் செய்பவனே, உயர்த்தியை உடைய திருவேங்கட மலையில் எழுந்து அருளி இருக்கிற என் ஸ்வாமியானவனே, பசுமை குன்றாத தவனத்தோடு (மரிக்கொழுந்து) பாதிரி பூவை சூட்ட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு முகம் கொடுத்து கொண்டு நிற்கின்ற ஸ்வாமியானவனே, திருவேங்கட மலையில் உறைகின்ற எம்பெருமானே, பச்சை நிறம் உள்ள மருக்கொழுந்து பாதிரி பூ சூட்ட வா என்று அழைக்கிறார்.

Leave a comment