திவ்ய பிரபந்தம்

Home

2.7.2 கருவுடை மேகங்கள்

கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக் கண்டால் ஒக்கும் கண்கள், * உருவுடையாய் உலகு ஏழும் உண்டாக வந்து பிறந்தாய், * திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே கிடந்தாய், * மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப் பூச்சூட்ட வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.7.2

நீர் கொண்டு எழுந்த மேகங்களை பார்த்தால், உன்னை பார்த்தார் போல இருக்கிற கண்களை உடையவனே, சப்த லோகங்களும், சத்தை பெரும்படி, திரு ஆய்பாடியில் வந்து திரு அவதாரம் செய்தவனே, உன்னை தனக்கு சம்பத்தாக உடையவளான பிராட்டிக்கு, வல்லபனானவனே, திருவரங்கம் பெரிய கோவிலில் கண் வளர்ந்து அருளுபவனே, பரிமளமானது பொருந்தி நின்று வீசுகின்ற மல்லிகை பூவை சூட்ட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நீர் கொண்டு வரும் காளமேகம் போன்ற வடிவு உடையவனே ! உலகங்களுக்கு நன்மை உண்டாகும்படி இந்த நிலத்தில் வந்து பிறந்தவனே! “திருவுக்கும் திருவாகிய செல்வா” (பெரிய திருமொழி 7.7.1) என்று சொல்வது போல, திருவாகிய ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு திருவாக இருப்பவனே! எப்போதும் பரிமளம் குறையாமல் வீசுகின்ற மல்லிகைப் பூவினை சூடவா என்று அழைக்கிறார். எம்பெருமானின் திருமேனி அழகு ஒரு தட்டும், அவனுடைய கண் அழகு ஒரு தட்டும், என்று இருக்குபடி உள்ளவனே என்கிறார். திருவரங்கத்தில் பள்ளி கொண்டு இருப்பவனே என்றும் கூறுகிறார்.

Leave a comment