ஆனிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய், * கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட * பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப, * தேனில் இனிய பிரானே, செண்பகப் பூச்சூட்ட வாராய்.
தன்னுடைய தாயார் யசோதை தனக்கு குழல் வாரிய பின் பூச்சூட்ட நினைக்கும் போது, கண்ணன் மற்ற குழந்தைகள் பசுகூட்டங்களை மேய்க்க கிளம்ப, கண்ணனும் கோல் வேண்டும் என்று கேட்க அதனையும் பல காரணங்கள் சொல்லி சமாதானம் செய்து, கண்ணனுக்கு செண்பக பூ, மல்லிகை, செங்கழுநீர், இருவாட்சி என்று பலவித பூக்களை சூட்ட அழைக்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 2.7.1
தேனைக் காட்டிலும் இனியவனே, உனக்கு வேண்டாதவர்கள் எல்லோரும் பரிகாசம் செய்யும்படி, கறந்த (பச்சை) பாலை பானையோடு குடித்து உன்னுடைய கறுத்த திருமேனியானது வாடும்படியாக காடு எங்கும் திரிந்து, பசுக்களின் கூட்டங்களை மேய்ப்பதற்கு மிருது ஸ்வபாவமான நீ போகின்றாய், பெறுவதற்கு அரிய மருந்தாயிருக்கும் அதை அறியவில்லை. (இந்த திருமேனி, ஸம்ஸாரிகளுக்கு பிறவி என்னும் நோய் தீர்க்கும் மருந்தாய் இருப்பதை நீ அறியவில்லை; நித்ய சூரிகளுக்கு போக்கியமாக மகிழ்ச்சிக்கு மருந்தாய் இருப்பதை நீ அறியவில்லை என்பது கருத்து. ஆதலால், நீ பசு மேய்க்க போவதை தவிர்த்து) செண்பக பூவை நான் சூட்டும்படி வந்தருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘கண்ணன் எங்கள் வீட்டில் பானையில் இருந்த கறந்த பாலைக் குடித்துப் போனான்” என்று கண்ணனுக்கு வேண்டாதவர்கள் சொல்லும்படி இருந்தாலும் தேனை விட இனியவனாக இருப்பவனே! கண்டவர்கள் கண் குளிரும்படியாக இருக்கும் உன்னுடைய திருமேனியின் அருமையைத் தெரிந்து கொள்ளாமல் காட்டிலே போய்த் திரிந்து வாடுவது, தவிர்த்து செண்பகப் பூவை நான் சூட்டும் படி நீ வர வேண்டும் என்கிறார். அனுபவிப்பவர்களுக்கு ஒரு காலும் திருப்தி ஏற்படாமல், மேன்மேலும் அனுபவிக்க வேண்டும் என்று சொல்லும்படி இருப்பவனே என்கிறார். இவ்வுலகத்தில் அடியவர்கள் இவன் செயலுக்கு உகப்பர் என்றும் அப்படிபட்ட கண்ணனுக்கு செண்பக பூ சூட்ட வா என்று அழைக்கிறார்.
தேனில் இனிய பிரானே, பற்றாதார் எல்லாம் சிரிப்ப, பானையில் பாலைப் பருகி, உன் கரிய திருமேனி வாட, கானகம் எல்லாம் திரிந்து, ஆனிரை மேய்க்க நீ போதி, அரு மருந்து ஆவது அறியாய், செண்பகப் பூச்சூட்ட வாராய் என்று அனுபவிக்கலாம்.
Leave a comment