தென் இலங்கை மன்னன் சிரம் தோள் துணி செய்து, * மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு, * என் இலங்கு நாமத்தளவும் அர சென்ற, * மின் இலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா * வேங்கட வாணர்க்கு ஓர் கோல் கொண்டு வா.
பெரியாழ்வார் திருமொழி 2.6.9
தென் திசையில் உள்ள, லங்காபுரிக்கு அரசனான ராவணனுடைய தலைகளையும் தோள்களையும் அறுத்துப் போட்டு, ஒளி விட்டு மிகவும் விளங்குகின்ற ஆபரணம் பூண்டவனாய், ராம பக்தியில் பூர்ணனான விபிஷணனக்கு, ‘என் பெயர் இவ்வுலகில் விளங்கும் அளவும், உனக்கு அரசு செல்லக் கடவது’ என்று அருளி செய்த, மின்னல் போன்று விளங்கும் ஹாரதத்தை அவனுக்கு ஒரு கோல் கொண்டு வா, திருவேங்கடமலையில் இருக்கும் அவனுக்கு ஒரு கோல் கொண்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வன துர்க்கம், கடல் துர்க்கம் மதிள் துர்க்கம் என்று மூன்று துர்க்கம் மூலம் ஒருவராலும் அழிக்க முடியாதபடி இருக்கும் லங்கைக்கு நிர்வாககன் ஆக இருக்கும், தேவர்கள் கொடுத்த வர பலத்தாலே அழிவில்லை என்று நினைத்து இருந்த இராவணனின் தலைகளையும் தோள்களையும் அறுத்துப் போட்டதை சொல்கிறார். விபீஷணன், லங்காவை விட்டு வந்ததால், ராவண சம்பந்தம் என்ற கெட்ட சொத்துக்கள் அழிந்து, ராம சம்பந்தம் என்ற நல்ல ஸ்ரீ கிடைத்ததால். பூர்ணன் ஆனதை சொல்கிறார்.
‘ராமனாய் மிடைந்த வேழ்மரங்களும் அடங்க எய்து வேங்கடம், அடைந்த மால்’ திருசந்த விருத்தம் (81)ல் சொல்லியபடி, அவதார குணம் எல்லாம் திருவேங்கடத்தில் பிரகாசிக்கும்படி இருக்கிறார் என்கிறார்.
துஷ்டர்களை ஒழித்து அடியவர்களை வாழ்விக்க இவனுக்குக் கோல் கொண்டு வா என்று சொல்கிறார். அப்படி கொண்டு வரா விட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களையும் காக்கப் போவேன் என்ற அர்த்தம் தெரியவரும். அழகிய இலங்கை மன்னன் சிரம், தோள் முதலியவற்றை துண்டித்து வீபீடண நம்பிக்கு அரசை அளித்த இவனுக்கு கோல் கொண்டு வா என்று பாடுகிறார். திருமலையில் இருக்கும் வேங்கடவனுக்கு கோல் கொண்டு வா என்று பாடுகிறார். இதேயே உரையாசிரியர்கள், துஷ்டர்களைத் தொலைத்து, சிஷ்யர்களை வாழ்விக்குமாறு இவனுக்குக் கோல் கொண்டு வா என்றும் கொண்டு வராவிட்டால் உன்னையும் தண்டித்துப் பின்பு பசுக்களைக் காக்கப்போவான் என்பது தொனிக்கும்படி சுவையாக சொல்வார்கள்.
Leave a comment