மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர், * மன்னன் மணி முடி பத்தும் உடன் வீழ, * தன் நிகரொன்று இல்லாச் சிலை கால் வளைத்திட்ட, * மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா வேலை அடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா.
பெரியாழ்வார் திருமொழி 2.6.8
மின்னலை ஒத்த இடையை உடையவளான சீதையின் நிமித்தமாக லங்கா வாசிகளான இராக்ஷசர்களுக்கு, தலைவனான ராவணனுடைய ரத்தின கிரீடங்களால் விளங்கும் பத்து தலைகளும் ஏக காலத்திலே அற்று விழும்படியாக தனக்கு (வில்லுக்கு) ஒப்பானது ஒன்றில்லாத வில்லை கால் வளைய பண்ணி எய்தவனாய் விளங்கும் திரு அபிஷேகத்தை உடையவனுக்கு ஒரு கோல் கொண்டு வா; கடலை மலையால் அணை கட்டியவனுக்கு ஒரு கோல் கொண்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
சீதா பிராட்டியை மீட்டுக் கொண்டு வருவதற்காக கடலிலே அணைகட்டி இலங்கை சென்று, எவர்க்கும் சமமாக முடியாத வில்லை, காலால் வளைத்து, பத்து தலை இராவணனின் இரத்தின கீரிடங்கள் பத்தும் கீழே விழ, அவனை அழித்தவனான இவனுக்கு, கோல் கொண்டு வா என்று பாடுகிறார்.
‘சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமை‘ (பெரிய திருமொழி 5.7.7) ல் சொல்லியபடி வேலை அடைத்ததுவும் பிராட்டிக்காகவே என்கிறார்.
Leave a comment