திவ்ய பிரபந்தம்

Home

2.6.6 ஆலத்திலையான் அரவின்

ஆலத்திலையான் அரவின் அணை மேலான், * நீலக் கடலுள் நெடுங் காலம் கண் வளர்ந்தான், * பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள் செய்த, * கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா * குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல் கொண்டு வா

பெரியாழ்வார் திருமொழி 2.6.6

ஆலிலையில் கண் வளர்ந்து அருளுபவன், திரு அனந்தஆழ்வான் மேல் கண் வளர்ந்து அருளுபவன், (திருப்பாற்கடல் வெளுப்பானதாக இருந்தாலும், திருமேனியின் நிழலில்) கறுத்து இருந்த சமுத்திரத்திலே பிரளயம் வரும் வரை திருக்கண் வளர்ந்து அருளுபவன், இளம் பருவத்திலே அர்ஜுனனுக்கு கிருபை செய்து அருளியவன், அழகன், உலகத்திற்கு உபகாரகனானவனுக்கு, ஒரு கோல் கொண்டு வா; திருக்குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவனுக்கு ஒரு கோல் கொண்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பெரிய திருமொழி (3.1.1) யில், ‘கருந்தண் மாகடல் கண் துயின்றவனிடம்‘ (கறுத்துக் குளிர்ந்து பெருத்த கடலில் யோக நித்திரை  செய்து அருள்பவனாய் உள்ள எம்பெருமானுக்கு) என்பது போலும், மூன்றாம் திருவந்தாதி 37 ல், உவக்கும் கருங்கடல்நீ ருள்ளான், (உப்புக்கரிக்கின்ற கரிய கடல்நீரிலுமுள்ளவனாய்) என்பது போலும் சொல்கிறார்.

பிரளய காலத்தில் உலகத்தை உண்டு ஆல் இலையின் மேல் பள்ளி கொண்டவனும், திரு அனந்தாழ்வானின் எப்பொழுதும் சயனம் கொண்டு இருப்பவனும் சிறு வயது முதல் அர்ஜுனனுக்கு உயில் தவி செய்பவனும் திருக்குடந்தையில் பள்ளி கொண்டு இருப்பவனுமான கண்ணனுக்கு ஒரு கோல் கொண்டு வா என்று பாடுகிறார். கிருஷ்ண அவதார கால சௌலப்யம் எல்லாம் தோன்றும் விதம் திருக்குடந்தையில் கண் வளர்ந்து அருளுபவன் குடந்தையின் கோவலன், ‘ஏரார் கோலம் திகழ கிடந்தான்‘ (திருவாய்மொழி 5.8.1) என்பதன் மூலம் சொல்கிறார்.

Leave a comment