சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல் * ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால் * பாரொன்றிப் பாரதம் கை செய்து பார்த்தற்குத் * தேரொன்றை யூர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா * தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா.
பெரியாழ்வார் திருமொழி 2.6.5
அடியவர்களுக்கு உதவி செய்கின்ற குணம் சேருகைக்காக, யுத்தத்தில் ஆயுதத்தை எடுக்க முடியாததால், தூது வியாபாரத்தில் அதிகரித்தவனாய் துரியோதனனிடம் சென்று ‘பாண்டவர்களுக்கு ஒரு ஊராவது கொடு’ என்று தாழ்ச்சி தோன்ற கேட்டும், வேண்டியபடி பெறாத கோபத்தால் பூமியில் கால் பாவி நின்று பாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்கு துணையாய் இருந்து ஒப்பற்ற தேரை நடத்தி அருளியவனுக்கு ஒரு கோல் கொண்டு வா; தேவ பிரானுக்கு ஒரு கோல் கொண்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தேவ பிரான் என்று சொன்னது நித்ய சூரிகளுக்கு நிர்வாககன் என்று சொல்லி அவனின் மேன்மையை சொல்வது; அதாவது மனுஷயத்தில் பரத்துவத்தை சொன்னது.
கண்ணன் பாண்டவ தூதனாகித் துரியோதனனிடம் சென்று ‘இருவர்க்குமுள்ள பாகங்களை பிரித்துக் கொண்டு இருவரும் ஒத்து வாழுங்கள்’ என்று முதலிற் சொல்ல, அதற்கு துரியோதனன் சம்மதிக்கவில்லை, நான் ஊசி குத்து நிலமும் கொடுக்க முடியாது ‘ என்று சொல்லி, அவர்களுக்கு தர்ம பலம் உள்ளது, ஸ்வர்க்க லோகங்களும் உண்டு; அவைகளை அனுபவிக்க கடவார்கள்; எங்களுக்கு இத்தனையும் உள்ளது; அதில் ஒன்றும் கொடுப்பதில்லை ‘ என்று வெட்டி வார்த்தை சொல்ல, ‘வீர போக்யதை அன்றோ, யுத்தத்தை செய்து ஜெயித்தவர்கள் பூமியை ஆள்வார்கள் என்று சொல்லி அதற்கு அவன் பொருந்தியதாக கொள்ளலாம்.
Leave a comment