திவ்ய பிரபந்தம்

Home

2.6.4 ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே

ஒன்றே உரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவன், * துன்று முடியான் துரியோதனன் பக்கல், * சென்று அங்குப் பாரதம் கை எறிந்தானுக்கு, * கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா * கடல் நிறவண்ணர்க்கு ஓர் கோல் கொண்டு வா.

பெரியாழ்வார் திருமொழி 2.6.4

அடுத்தாரை கை விடாமை என்ற ஒரே அர்த்ததை சொல்லுபவனாய், எல்லோருக்கும் அபயம் என்று சொல்லி பாதுகாப்பு கொடுப்பவனாய், நவரத்தினங்கள் அழுந்தின கிரீடத்தை உடைய துரியோதனனிடத்தில் பாண்டவர்கள் தூதனாகச் சென்று பாரத யுத்தத்திற்காக, அங்கே கைத்தட்டி போனவனுக்கு கன்றுகளை மேய்க்க தகுந்த ஒரு கோல் கொண்டு வா; கடல் நிற வண்ணனுக்கு ஒரு கோல் கொண்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

முதல் இரண்டு வரிகளில் இருந்து இரண்டு வித அர்த்தங்கள் சொல்வதுண்டு. ஒன்று எம்பெருமானுக்காகவும் ஒன்று துரியோதனுக்காகவும் கொள்ளலாம்.

பாண்டவர்களும் நாங்களும் ஒன்றாக கூடி ஜீவிப்பதில்லை என்ற ஒரே அர்த்தமே சொல்லுபவனாய், ‘கூடி ஜீவிப்பதில்லை என்றால் அவர்களுக்கு ஏதேனும் கொடுக்க வேண்டுமோ’ என்று மத்யம் செய்பவர்கள் சொல்ல. ‘அவர்களுக்கு ஒரு நூல் குத்தும் நிலம் கூட தருவதில்லை’ என்று ஒரே வசனம் சொல்லுபவனாய் உள்ள துரியோதனன் என்று அர்த்தம் சொல்வதும் உண்டு. நவரத்தினங்கள் நெருங்கி பொருந்தியுள்ள கீரீடத்தை அணிந்த துரியோதன் என்பது ஒரு அர்த்தம்.

தன் அடியவர்களை நழுவ விடாதவன் என்ற ஒரு வார்த்தையை சொல்லும் கண்ணன், எல்லோருக்கும் அபயம் கொடுப்பேன் என்ற ஒரு வார்த்தையை சொல்லும் கண்ணன் என்றும் நவரத்தின கீரீடத்தை அணிபவன் என்று கண்ணனுக்கும் அர்த்தம் சொல்லுவார் உண்டு. கண்ணன் நெருங்கி சேவிக்கப் படுபவன் என்று சொல்வதுண்டு.

இரண்டு பக்கத்தையும் சேர விடலாமோ என்று தூதனாய் சென்று பொருத்த பார்த்த இடத்தில் எல்லாம் பொருந்தாமையாலும், அது தன்னை செய்வதற்கு பாரதயுத்தத்திற்கு கைதட்டி போனவன் என்று சொல்கிறார். பாண்டவர்களுக்காக நின்று பாரத யுத்தத்தில் கையும் அணியும் வகுத்தவனுக்கு என்று சொல்கிறார்.

Leave a comment