கறுத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான், * பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான், * நெறித்த குழல்களை நீங்க முன்னோடி, * சிறுக் கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா * தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா
பெரியாழ்வார் திருமொழி 2.6.3
கோபத்தை கொண்டவனாக எதிர்த்து நின்ற கம்சனை முடித்தவனாய், வருகிற போதே வேகத்தைப் பொறுத்து நின்று தன்னை அழிக்க எதிரே வந்த பாகசூரனுடைய வாயை கிழித்தவனாய் நெருக்கமாக முன்னே தொங்குகின்ற திருகுழல்கள் ஓடுகிற வேகத்தாலே நான்காக இருந்தவை, இரண்டாக நீங்கும்படியாக இளங்கன்றுகளை மேய்க்கும் அவனுக்கு கோல் கொண்டு வா, தேவர்களுக்கு உபகாரகாரகனான அவனுக்கு ஒரு கோல் கொண்டு வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பகாஸுரன், தன்னை விழுங்கி உமிழும் வரை கண்ணன் அவனை ஒன்றும் செய்யாமல் இருந்து பிறகே அவன் வாயைக் கிழித்ததனால் பொறுமை காத்தான் என்பது விளங்கும். கோபித்து எதிரில் வந்த கம்சனையும் கொன்ற கண்ணன். நெருங்கிய கூந்தலை உடைய கண்ணன் ஓடி கன்றுகளை மேய்க்கும் போது இரண்டு பக்கமும் விரிகின்ற கூந்தலை கொண்ட கண்ணனுக்கு, தேவர்களுக்கு உதவி செய்யும் கண்ணனுக்கு, கோல் கொண்டு வா என்று பாடுகிறார்.
Leave a comment