திவ்ய பிரபந்தம்

Home

2,5,9 மன்னன் தன் தேவிமார் கண்டு

மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த, * முன் இவ்வுலகினை முற்றும் அளந்தவன், * பொன்னின் முடியினைப் பூவணை மேல் வைத்து, * பின்னேயிருந்து குழல் வாராய் அக் காக்காய் * பேராயிரத்தான் குழல் வாராய் அக் காக்காய்.

பெரியாழ்வார் திருமொழி 2.5.9

அசுர ராஜனான மஹாபலி சக்ரவர்த்தியின் மனைவிமார்கள் இவன் வேஷத்தையும் பேசுவதையும் பார்த்து களிக்கும் வண்ணம் முன்னே இந்த உலகம் முழுவதையும் அளந்து கொண்டவனுடைய அழகிய திருமுடியை பூப்போல மெத்தென்ற படுக்கையின் மேல் வைத்து பின் புறத்தில் நின்று குழல் வார வாராய், ஆயிரம் திருநாமங்களை உடையவனுடைய குழல் வார வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

புலன் கொள் மாணாய்‘, (திருவாய்மொழி 1.8.6) (காண்பவர்கள் எல்லா இந்திரியங்களையும் கொள்ளை கொள்கின்ற வாமனனாய்), ‘பொங்கிலங்கு புரி நூலும்‘ (பெரிய திருமொழி 4.4.7) (பூணூல், க்ர்ஷணாஜினம் மற்றும் மூஞ்சி இவைகளுடன் பதறி நடந்து வந்த நிலை), ‘கொள்வன் நான் ‘ (திருவாய்மொழி 3.8.9) என்று சொன்னபடி, எல்லாரையும் எல்லா விதத்திலும் மகிழ்வடைய செய்யும் வாமன உருவத்தையும், பிரம்மச்சாரி ஆச்ரமத்துக்கு ஏற்றவாறு கொண்ட கோலத்தையும், மழலைச் சொல் சொல்லும்  அழகையும் கண்டு மஹாபலியின் மனைவியரும் மகிழ்ந்தனர். கையில் நீர் விழுந்த உடன், முன்பே தன்னுடையதாக இருந்த இந்த உலகங்களை எல்லாம், அபூர்வமாக பெற்றதைப்போல், அளந்து கொண்ட இவனுடைய அழகிய தலையை புஷ்பத்தினால் ஆன படுக்கையில் வைத்து இவன் பின்புறத்தில் இருந்து ஆயிரம் நாமங்களை கொண்ட எம்பெருமானுக்கு குழல் வார வருவாய் என்று பாடுகிறார்.

Leave a comment