கன்றினை வாலோலை கட்டிக் கனிகள் உதிர எறிந்து, * பின்தொடர்ந்து ஓடி ஓர் பாம்பைப் பிடித்துக் கொண்டாட்டினாய் போலும் * நின் திறத்தனேன் அல்லன் நம்பீ நீ பிறந்த திரு நல்நாள் * நன்று நீ நீராட வேண்டும் நாரணா ஓடாதே வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.4.8
ஒரு கன்றின் வாலில் ஓலையைக் கட்டி பழங்கள் உதிரும்படி மரத்தின் மேல் வீசி எறிந்து, பின்னே தொடர்ந்து ஓடிச் சென்று ஒரு பாம்பைப் பிடித்துக் கொண்டு ஆட்டினாய்; தீம்பில் கை தேறியவனே, உன் விஷயங்கள் ஒன்றும் நான் அறியேன்; நீ அவதரித்த விசேஷமான திரு நக்ஷத்திரம் இன்று ; (ஆதலால்) நீ நன்றாக நீராட வேண்டும் ; நாராயணா, ஓடாமல் வந்து அருளுவாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கன்றின் வாலில் ஓலைகளை கட்டி, அதனை பிடித்து விளா மரத்தின் மேல் எறிந்ததால் கன்று மற்றும் விளா மரங்களில் ஆவேசித்திருந்த அரக்கரகள் அழிந்தனர். காளியன் என்ற விஷ பாம்பினை ஆட்டி அதனையும் அந்த இடத்தில் இருந்து ஒட்டிவிட்டாய்; உன் விஷயம் ஒன்றையும் அறியாதவளாக இருந்தேன். இன்று நீ அவதரித்த திரு நட்சத்திரம். திருமஞ்சனமாட வா என்று அழைக்கிறாள். ஒரு நாளும் நீராடாதாரும் பிறந்த நாளில் நீராடாதார் இல்லை என்பதால் இப்படி அழைக்கிறார்.
Leave a comment