எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம் பிள்ளை கிள்ளி எழுப்பி, * கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே, * உண்ணக் கனிகள் தருவன் ஒலிகடல் ஓதநீர் போலே, * வண்ணம் அழகிய நம்பீ மஞ்சன மாடநீ வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.4.6
எண்ணைய் குடத்தை உருட்டியும், (தூங்குகிற) சிறு பிள்ளையை வீரிட்டு கூப்பிடும்படி செய்தும், கண் இமையை அகலமாய் புறவாயாக புரட்டி விழித்து (அப்பூச்சி காட்டி) இப்படி பொறுக்க முடியாத தீம்புகளை செய்யும் பிரானே, நீ உண்ணும் விதமாக பழங்கள் கொடுப்பேன்; (பிறகு) ஒலிக்கின்ற சமுத்திரத்தின் அலைகளின் ஜலம் போலே அழகிய நிறத்தை உடையவனே, பூர்ணனே மஞ்சம் ஆட நீ வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வீட்டில் உள்ளவர்கள் எல்லோருடைய கவனதையும் திருப்பி, முதலிலே எண்ணெய்க் குடத்தை உருட்டி, அவர்கள் சிந்திப்போன எண்ணெயை வழிப்பதும் துடைப்பதுமாய் இருக்கையில், அந்த காரியத்தை விட்டு ஓடி வரும்படி, தொட்டிலில் படுத்துத் தூங்கும் குழந்தையைத் தேள் கொட்டினாற் போல வீரிட்டுக் கதறி அழும்படி வெடுக்கெனக் கிள்ளி, அருகில் வந்த சிறுவர்களுக்கு அப்பூச்சி காட்டிப் பயப்படுத்தி இப்படி எல்லாம் தீம்பு செய்பவனே! உண்ண பழங்கள் தருகிறேன், மஞ்சனமாட வா என்று யசோதை அழைக்கும் பாடல்.
Leave a comment