கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து, * வஞ்சகப் பேய்மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே, * மஞ்சளும் செங்கழு நீரின் வாசிகையும் நாறு சாந்தும், * அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே நீராட வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.4.4
கம்ஸனுடைய ஆணையால் வந்த கொடுமையான சகடாசுரனை திருவடிகளால் முறித்து, வஞ்சனையை உடைய பூதனையானவள் மாண்டு போகும் படி அவள் முலையில் வாய் வைத்த அமுது செய்த நாயகனே, மஞ்சள் காப்பும் செங்கழுநீர் மாலையும் கஸ்தூரி, பனி நீர் முதலியவற்றால் பரிமளிக்கின்ற (கலவை) சந்தனமும், (திருக் கண்களுக்கு சாத்த) அஞ்சனமும் சம்பாதித்து வைத்து இருக்கிறேன்; (ஆதலால்) அழகை உடைய கண்ணனே, நீராட வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உன் திருமேனிக்கு தேவையானவைகளை எல்லாம் சேர்த்து வைத்திருக்கிறேன், நீராட வா என்றழைக்கிறாள். உனது அழகு கெடாதபடி நீ நீராட வேண்டும் என்பதற்காக அழகனே என்று அழைக்கிறாள். கம்சனின் வஞ்சனையால் அனுப்பப் பட்ட சகடாசுரனை உதைத்து வதம் செய்தவனே, என்றும் பூதனை துடிதுடிக்க வதம் செய்தவனே என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகிறார். மஞ்சள், திருமஞ்சனத்திற்கு பிறகு அணிய வேண்டிய செங்கழுநீர் மாலை, வாசனையான சந்தனத்தையும், கண்களுக்கு இடும் மையையும் எடுத்து வைத்து இருப்பதாக சொல்கிறார்.
Leave a comment