பேய்ச்சி முலை உண்ணக் கண்டு பின்னையும் நில்லாது என் நெஞ்சம், * ஆய்ச்சியர் எல்லாம் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன், * காய்ச்சின நீரோடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன், * வாய்த்த புகழ் மணி வண்ணா மஞ்சனமாட நீ வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.4.3
பூதனையின் முலைப்பாலை அவள் மாளும்படி நீ அமுது செய்தது கண்ட பின்பும், என் நெஞ்சானது, (உன்னிடத்தில் உள்ள பிரீதியாலே) தரிக்க மாட்டாமல், இடைச்சிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, (‘அவன் பூதனையின் முலை உண்ட செய்தி கண்டு அறியாயோ, நீ அவனுக்கு முலை கொடுக்க போகிறாயோ’, என்று பயந்து) என்னை அழைத்த போதும் உனக்கு அஞ்சாமல் முலை கொடுத்த நான், நெல்லியோடே காய்ச்சின தீர்த்தத்தை திருமஞ்சனத் தாழியிலே நிறைத்து வைத்தேன்; நல்ல புகழை உடையவனாய் நீல மணி போன்ற வர்ணத்தை உடைய கண்ணனே, (புழுதி முதலியவை போகும்படி) நீராட நீ வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘வஞ்சனையால் வந்த பேய்ச்சி‘ (பெரிய திருமொழி 7.8.5) என்று சொன்னபடி ‘உனக்கு முலை கொடுத்த பூதனை பட்ட பாட்டை நான் அறிந்திருந்தும், நாமும் அந்த துன்பம் அடைய வேண்டுமோ என்று அஞ்சி ஓடாமல், மற்றைய இடைச்சிகள் சொல்லை கேட்காமல், உனக்கு நான் முலை தந்தது அன்பினால் தான். அதற்காகவது நீ, நான் சொல்வதை கேட்க வேண்டமோ’ என்கிறாள். நெல்லி இலையுடன் காய்ச்சின நீரோடு காத்து இருக்கிறேன், நீ நீராட வா என்று அழைக்கிறார்.
Leave a comment