திவ்ய பிரபந்தம்

Home

2.4.2 கன்றுகளோட செவியில்

கன்றுகளோட செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால், * தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன், * நின்ற மரா மரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம் * இன்று நீ நீராட வேண்டும் எம்பிரான் ஓடாதே வாராய்

பெரியாழ்வார் திருமொழி 2.4.2

கன்றுகள் பயந்து ஓடும்படி அவற்றின் காதுகளில் கட்டெறும்பை பிடித்து விட்டால் ஒன்று போனவழி ஒன்று போகாமல் சிதறி ஓடிப்போய் விடும் ஆகையால், (பிறகு நீ), வெண்ணையை திரட்டி விழுங்கும்படியை காண மாட்டேன். (கன்றுகள் சிதறி ஓட்டினால், பசு கறக்காது போகும், அதனால், உனக்கு ஜீவனமான வெண்ணை குறைந்து விடும்). நெருங்கி நின்ற ஏழு சால மரங்களை முறித்து சாய்த்தவனே, இந்நாள், நீ அவதரித்த சரவண நக்ஷத்திரம் ஆதலால், நீ திருமஞ்சனம் கொண்டு அருள வேண்டும். என் நாயகனே, (என்னை வஞ்சித்து) ஓடிப் போகாமல் வந்து அருள் வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை

கன்று உண்டானால், பசுவிடம் பால் சுரக்கும், பசுவைக் கறந்தால் பால் கிடைக்கும், பாலில் இருந்து வெண்ணெய் எடுக்கலாம். ஆகவே, வெண்ணெய் வேண்டும் என்றால் கன்றுகள் அவசியம். கன்றுகள் பயந்து ஓடுவதை காண்பதற்காக கண்ணன் அவற்றின் காதுகளில் கட்டெறும்பைப்  பிடித்துப் புக விட்டால் அவை ஓடிப் போய் விடும். பின்பு கண்ணனுக்கு பிரியமான வெண்ணெய் எப்படி கிடைக்கும் என்று யசோதை சொல்லி மஞ்சனத்திற்கு அழைக்கிறார்.

ஒரு அடியவனுடைய சந்தேகத்தை தீர்ப்பதற்காக ஒரு மரம் மட்டும் இல்லாமல் ஒரே அம்பினில் ஏழு மரங்களை சாய்த்த இராமபிரானை இங்கு குறிப்பிடுகிறார்.

Leave a comment