திவ்ய பிரபந்தம்

Home

2 4.1 வெண்ணை அளைந்த

வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு, * திண் என இவ் இரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன், * எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன், * நண்ணலரிய பிரானே நாரணா நீராட வாராய்

தாயான யசோதை, இந்த அவதாரத்தின் பெருமை அறிந்து, அனுசரித்து, காது துளைகளை பெரிதாக்கி காதணிகள் அணிவித்து, அந்த குழந்தையை நீராட்ட வேண்டுமே என்று அதற்கு தேவையான பொருட்களை சேகரித்து, அதற்குப் பிறகு தேவையான அலங்கார பொருட்களையும் சேகரித்து, கண்ணனை மஞ்சனதிற்கு அழைக்க அவன் மறுக்க, அதற்கான காரணங்களையும் சொல்கிறார். அவள் புழுதி பொருந்திய பொன் மேனியை பார்க்க ஆசைபட்டாலும், காண்பவர்கள் எப்படி வளர்த்து இருக்கிறார் என்று பழிப்பர் என்றும், அவனுக்கு அபிமானமான நற்பின்னை பிராட்டி சிரிப்பாள் என்றும் சொல்லி அவனை திருமஞ்சனம் செய்ய அழைக்கும் பதிகம். அவனை வருந்தி உடன்பட வைத்து நீராட்டிய பிரகாரத்தை பெரியாழ்வாரும் தன் காலம் போலவே, தானும் அனுபவித்து பாடுகிறார்.

பெரியாழ்வார் திருமொழி 2.4.1

வெண்ணைய் அளைகையால் உண்டான முடை நாற்றத்தையும், விளையாடுகையில் உண்டான புழுதியையும் கொண்டு இன்று இரவில் உன்னை தினவால், உடம்பை படுக்கையில் தேய்த்துக் கொண்டு கிடக்கும்படி, உன் விஷயத்தில் பரிவு கொண்ட நான் நிச்சயமாக சம்மதிக்க மாட்டேன். (உன் உடம்பில் பூசுவதற்கு உரிய) எண்ணை காப்பையும், அந்த எண்ணையைக் கழற்றுவதற்கு புளிக்காப்பையும் கையில் கொண்டு இந்த இடத்தில் நெடு நேரமாக இருக்கிறேன்; சொந்த முயற்சியால் ஒருவருக்கும் கிட்ட ஒண்ணாத உபகாரகனே, நாராயணனே, திருமஞ்சனம் கொண்டு அருள வந்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வெண்ணை உண்பதில் உள்ள ஆசையினால், ‘தாரர் தடந்தோள்கள் உள் அளவும் கை நீட்டி‘, (சிறிய திருமடல்) வெண்ணெய் அளைந்ததனால், உடம்பு முழுவதும் வெண்ணெய் பட்டு மொச்சை நாற்றம் வீசும்.  அதனோடு விளையாடப் போனதினால் அதன் மேல் புழுதியும் படிந்து, இவ்விரண்டும் உடம்பில் இருந்தால் அரிப்பு எடுக்கும். அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்த்து வருந்துவதைப் பொறுக்க மாட்டாமல் நீராட அழைக்கிறாள்.

Leave a comment