மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்பு, உண்டாய் வெண்ணெய் என்று, * கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்றிலையே, * செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரிதரா, உன் காது தூரும், * கையில் திரியை இடு கிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே.
பெரியாழ்வார் திருமொழி 2.3.9
இவன் வெண்ணைய் திருடினான் என்று சொல்லுகிறவர்களுடைய வார்த்தையை உண்மையாக நினைத்து வெண்ணைய் களவு செய்து உண்டாய் என்று என் கையை பிடித்து விளிம்பு உடைய உரலோடு எல்லோரும் பார்க்கும்படி வெண்ணைய் திருடாத என்னை கட்டவில்லையோ, (என்று அவன் சொல்ல), ஸ்ரீயின் பதியானவனே, இப்படி நான் செய்தவற்றை சொல்லிகொண்டு சிரித்துக்கொண்டு என்னிடம் வராமல் காலம் தாழ்த்திக் கொண்டு அங்கேயே இருந்தால், உன் காதுகள் தூரத்து விடும், (ஆதலால்) இங்கு நிற்கிற இப்பெண்கள் ‘கூழைக்காது, சுணைக்காது ‘ என்று சொல்லி திரியாதபடி என் கையில் இருக்கிற திரியை உன் காது பெருக்கும்படி இட்டு கொள்வாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன் யசோதையை நோக்கி ‘உன் பேச்சை நம்பக் கூடாது; நீ சொல்லுவார் சொல்வதைக் கேட்டு என்னைத் தண்டிப்பவள் அன்றோ?’ என்று சொல்ல, அதற்கு யசோதை ‘உன்னை நான் அப்படிச் செய்தது உண்டோ?’ என்று கேட்க கண்ணன் ‘இவன் வெண்ணெய் திருடினான் என்று யாரோ சொல்ல, அதை உண்மை என்று நம்பி என் கையைப் பிடித்து என்னை எல்லாரும் பார்த்துப் பரிகசிக்கும்படி உரலோடு கட்டவில்லையோ?’ என்று சிரித்துகொண்டு கேட்க, யசோதை ‘நீ இப்படி நான் செய்தவற்றைச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இருந்தால், உன் காதுகள் தூர்ந்து விடுமே; மேலும் உன்மேல் உள்ள அன்பினால் உன்னை விட்டுப் போகாமல் நிற்கிற, நீ விரும்புகிற, இந்தப் பெண்கள் உந்தன் காதினை குறித்து இழித்து பேசி உன்னை அவர்கள் திட்டதாபடி உன் காதைப் பெருக்க இந்த திரியை அணிந்துகொள்ள வேண்டும்’ என்று மறுபடியும் திரியிடப் பார்க்கிறாள்.
Leave a comment