வா என்று சொல்லி என் கையைப் பிடித்து வலியவே காதில் கடிப்பை, * நோவத் திரிக்கில் உனக்கு இங்கு இழுக்குற்றென்? காதுகள் நொந்திடும் கில்லேன், * நாவற் பழம் கொண்டு வைத்தேன் இவை காணாய் நம்பீ முன் வஞ்ச மகளைச் * சாவப் பாலுண்டு சகடு உறப் பாய்ந்திட்ட தாமோதரா இங்கே வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.3.12
(பத்மநாபா இங்கே) வா என்று சொல்லி அழைத்து, என்னுடைய கையை சிக்கென பிடித்து கொண்டு பலாத்காரமாக என் காதில் கடுக்கனை நான் நோகும்படி திரிகி இட்டாய் என்றால், உனக்கு இங்கே ஏதாவது சேதம் உண்டா, என் காதுகள் நோகும், (ஆதலால்) வர மாட்டேன், (என்று அவன் சொல்ல), பூர்ணன் ஆனவனே, (நீ உகக்கும்) நாவல் பழங்களை சம்பாதித்துக் கொண்டு வந்து வைத்தேன்; இவற்றை பார் ; முன்பு வஞ்சனை கொண்ட பேய்ச்சி (பூதனை) மாளும் படி அவள் முலைப்பால் உண்டு சகடமானது இற்று முறிந்து விழும்படி அவன் மேல் பாய்ந்த தாமோதரனே இங்கே வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தன் வடிவை மறைத்து தாய் வடிவு கொண்ட வஞ்சனையுடன் வந்த பூதனை என்கிறார்.
மேல் இட்டு வந்த சகடத்தை முறிய உதைத்து போட்டு, அந்த விரோதிகள் கையில் அகப்படாமல், அவ்வளவு சக்தியுடன் இருந்த போதும், சக்தி இல்லாதவன் போல, என் கையில் பிடிபட்டு, நான் கட்டிய கயிற்றின் தழும்பு உன் வயிற்றில் இருப்பதாலே தாமோதரன் என்று பெயர் கொண்டு உன் நீர்மையை கொண்டாய் அன்றோ என்கிறார்.
Leave a comment