காரிகையார்க்கும் உனக்கும் இழுக்கு உற்றது என்? காதுகள் வீங்கி எரியில் * தாரியாது ஆகில் தலை நொந்திடும் என்று விட்டிட்டேன் குற்றமே அன்றே, * சேரியில் பிள்ளைகள் எல்லாரும் காது பெருக்கித் திரியவும் காண்டி, * ஏர் விடை செற்று இளங் கன்று எறிந்திட்ட இருடீகேசா என்தன் கண்ணே.
பெரியாழ்வார் திருமொழி 2.3.10
என் காதுகள் தடித்து எரியுமாகில் சிரிக்கிற அப்பெண்களுக்கும் திரியிட வந்து நிற்கிற உனக்கும் சேதம் என்ன, (என்று அவன் சொல்ல), திரியிடுகிறது இல்லாமால் போனால் தலை நோவு ஏற்படும் என்று இளம் பருவத்திலே விட்டு வைத்த என்னுடைய குற்றம் அன்றோ, எதிர்த்து வந்த ‘அரிஷ்டநேமி’ என்னும் ரிஷபத்தை முடித்து இளம் கன்றின் வடிவாக நின்ற அசுரனை விளாவாய் நின்ற அசுரன் மேல் எறிந்து போட்ட ரிஷிகேசனே, எனக்கு கண்ணானவனே, இந்த இடைசேரியில் உள்ள எல்லாப் பிள்ளைகளும் திரியிட்டு காது பெருக்கி கொண்டு திரிவதை காண்பாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘வம்பவிழ் கானத்து மால் விடை ‘ (பெரிய திருமொழி 10.7.1) என்கிறபடி ரிஷபத்தின் வடிவு கொண்டு வந்த அரிஷ்டாஸுரனை அழித்து , கன்றின் வடிவான் வந்த வத்ஸாஸுரனை கொண்டு விளா மரங்களாய் இருந்த மற்ற இரண்டு அசுரர்களையும் அழித்த சரித்திரங்களை ஆழ்வார் இங்கு குறிப்பிடுகிறார். உன்னை கண்டவர்களுடைய சர்வ இந்திரியங்களையும் உன வசமாக்கி கொள்வதால், ரிஷிகேசன் என்ற திருநாமத்தை கொண்டாய் என்கிறார்.
Leave a comment