என் குற்றமே என்று சொல்லவும் வேண்டா காண் என்னை நான் மண் உண்டேனாக, * அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இலையே, * வன் புற்றரவின் பகைக் கொடி வாமன நம்பீ உன் காதுகள் தூரும் * துன்புற்றன எல்லாம் தீர்ப்பாய் பிரானே திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.
பெரியாழ்வார் திருமொழி 2.3.8
என் குற்றம் என்று நீ சொல்ல வேண்டியதில்லை, நான் மண் தின்றதாக நினைத்து அன்பை உடையவளாய், என் வாயில் மண் தின்ற சுவடு உண்டோ என்று பார்த்து, சுவடு கண்டாரைப் போல் என்னைப் பிடித்தும் அடித்தும், எல்லோர்க்கும் இவன் மண் உண்டதை பாருங்கள் என்று காட்ட வில்லையோ (என்று அவன் சொல்ல), வலிய புற்றில் பகுங்கி கிடக்கிற பாம்புக்கு சத்ருவான கருடனை கொடியாகக் கொண்டவனே, குறள் பிரம்மச்சாரியாகப் போய் அபிமதம் பெற்று பூர்ணனானவனே, உன்னுடைய காதுகள் துந்துவிடும்; அடியவர்கள் பட்ட துன்பத்தை எல்லாம் தீர்ப்பவனே, உபகாரகனானவனே, உன் காதில் திரியை இட்டு மெய்யே சொல்லக் கடவேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை. ‘மெய் செல்லுகேன்’ என்று சொல்லும் போது ‘உன் காதில் திரியை இட்டு விட்டு மெய்யே கடக்கப் போய் விடுகிறேன்’ என்று பொருள் கொள்வது.
கண்ணன் யசோதையை நோக்கி “தலை நில்லாதப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் என் குற்றமே” என்று நீ உன்னை வெறுத்துச் சொல்லுவதை நான் கேட்கவில்லை என்று என் மேலுள்ள குற்றத்தை நினைத்து தானே, என்று சொல்ல, அதற்கு யசோதை ‘பின்னர் யார் குற்றம்?’ என்று கேட்க, கண்ணன் ‘உன் மீதும் குற்றமில்லையோ?’ என்று கேட்க, யசோதை ‘நான் என்ன செய்தேன்?’ என்று வினவ, கண்ணன் ‘நான் மண் திண்ணாது இருக்கையில் மண் தின்றதாகப் பழியை சொல்லி, என் மேல் அன்பு உடையவள் போல என்னைப் பிடித்துக் கொண்டு என் வாயில் மண் தின்ற சுவடு இருக்கிறதா என்று பார்த்து, அது இல்லாது இருக்கையிலேயே அதைக் கண்டதாகச் சொல்லி அடித்து அதோடு நில்லாமல் ‘பெண்களே பாருங்கள், இவன் மண் திண்ணும் வழக்கத்தை’ என்று எல்லாருக்கும் நீ காட்டவில்லையோ’ என்று சொன்னபோது, யசோதை ‘இப்படி நாம் வழக்காடிக் கொண்டிருந்தால் பொழுது போகின்றது, அடியவர்களுடைய ஆசைகளை போக்குகிறவனே ! உன் காதுகள் தூர்ந்துவிடும்’ என்று சொல்ல, கண்ணன் ‘நீ என்னை எவ்வளவு போற்றி பாடினாலும் வேண்டாம், என்னைப் பிடித்தல், அடித்தல் செய்வதில்லை என்று உறுதியாக ஒரு வார்த்தை சொல்’ என்று சொல்ல, யசோதை ‘நான் திரியிடும்படி நீ ஒத்துக்கொண்டு வா, பின்பு அப்படியே சத்யம் செய்து தருகிறேன்’ என்கிறாள். வலிய புற்றில், வசிக்கின்ற பாம்புக்கு விரோதியான கருடனை தன்னுடைய கொடியில் கொண்ட வாமனனே என்று புகழ்கிறார்.
Leave a comment