திவ்ய பிரபந்தம்

Home

2.3.7 முலையேதும் வேண்டேன் என்று ஓடி

முலையேதும் வேண்டேன் என்று ஓடி நின் காதில் கடிப்பைப் பறித்து எறிந்திட்டு, * மலையை எடுத்து மகிழ்ந்து கல் மாரி காத்துப் பசு நிரை மேய்த்தாய், * சிலை ஓன்று இறுத்தாய், திரி விக்கிரமா திருஆயர் பாடிப் பிரானே, * தலை நிலாப் போதே உன் காதைப் பெருக்காதே விட்டிட்டேன் குற்றமே அன்றே

பெரியாழ்வார் திருமொழி 2.3.7

‘நீ கொடுக்கும் முலையும் மற்றுமுள்ள பக்ஷணங்களும் நான் விரும்பவில்லை’, என்று சொல்லி என் கையை தவிர்த்து ஓடி, உன்னுடைய காதில் இட்ட பூஷணத்தை பிடுங்கி எறிந்து போட்டு, (இந்திரன் பசி கோபத்தினால் மழை பெய்விக்க), கோவர்த்தன மலையை, குடையாக எடுத்து, எந்த கஷ்டமும் இல்லாமல், மனம் உகந்து, அந்த கல் மழையில் இருந்து, இடையர்களையும் பசுக்களையும் ரக்ஷித்து, பசு கூட்டங்களை இடையர் மேய்க்கும்படி செய்தவனே, தனித்தன்மையுடன் விளங்கும் ருத்ர வில்லை, சீதா விவாகம் காரணமாக முறித்தவனே, திருவடிகளை வளர்த்து உலகங்களை அளந்து அருளியவனே, திரு ஆய்ப்பாடியில் உள்ள மக்களுக்கு ஸ்வாமியானவனே, தலையானாது நில்லாத இளம் பருவத்திலே உன் காதினை பெருக்காமல் விட்டு வைத்தது என்னுடைய குற்றம் அன்றோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணனைப் பலவிதமாகப் புகழ்ந்து பேசி யசோதை முலை உண்ணச் சொன்னது, அவனும் அப்படியே முலை உண்ணத் தொடங்க அப்போது யசோதை அவன் காதில் கடிப்பை இட முயற்சிக்க கண்ணன் மிகவும் கோபித்து ‘நீ கொடுக்கும் முலையும் வேண்டா வேறு ஒரு பண்டமும் வேண்டா’ என்று சொல்லி அவளுக்குப் பிடிபிடாமல் ஓடிச் சென்று காதில் இட்ட காதணியையும் பிடுங்கி எறிந்துவிட யசோதை மறுபடியும் பலவிதமாகப் புகழ்ந்து காதில் கடிப்பை இட மறுபடியும் முயற்சிக்க அவன் இசையாமல் இருக்க, யசோதை ‘உன் மேல் ஒரு குற்றமுமில்லை; இளங்குழந்தைப் பருவத்திலேயே உன் காதைப் பெருக்காமல் விட்டது என்னுடைய குற்றமே’ என்று கூறுகின்றாள்.

கோவர்தனகிரியை சுமந்த போது ஒரு இடையர் மேலோ, ஒரு பசுவின் மேலோ ஒரு துளி விழாதபடி, ‘இன ஆனிரை பாடி அங்கே ஒடுங்க‘ (திருவாய்மொழி 7.4.10), என்று காத்தது சொல்லப்பட்டது. ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுக்கு (சீதா) ஒருவராலும் எடுத்து பேர்க்க முடியாதபடி இருந்த ரௌத்திரமான வில்லை முறித்தவனே என்று சீதா ராம கல்யாண சரிதம் சொல்லப்பட்டது.

Leave a comment