விண் எல்லாம் கேட்க அழுதிட்டாய் உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி, * மண் எல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி மதுசூதனே என்று அறிந்தேன், * புண்ணேதும் இல்லை உன் காது மறியும் பொறுத்து இறைப்போது இரு நம்பீ * கண்ணா என் கார்முகிலே கடல் வண்ணா காவலனே முலை யுணாயே.
பெரியாழ்வார் திருமொழி 2.3.6
மண் தின்றாய் என்று அடித்தவாறே, ஆகாயம் முழுவதும் கேட்கும்படி அழுத உன்னுடைய வாயில், (மண் தின்ற சுவடு உண்டாகில் பார்ப்போம்), என்று ஆசைப்பட்டு, அத்தை, நான் பார்த்த அளவில், பூமி எல்லாம், உன் திரு வயிற்றில் இருக்கிறதை கண்டு, என் நெஞ்சினில் (நம்முடைய பிள்ளை என்று இவனை அடித்தோமே என்று) அஞ்சி, இவன் மது என்ற அரக்கனை கொன்ற ஸர்வேசவரனே என்று தெரிந்து கொண்டேன்; (இப்படி இவள் தன்னை அந்நியனாக்கி விலகிக்கொள்ள பார்க்கையில், அவன் வந்து, தன் பிள்ளை என்று தோன்றும்படி கட்டிகொண்டு, காதில் புண் என்று சொல்கிறான்;) புண் ஒன்றும் இல்லை; உன்னுடைய காதானது, தண்டு புரளும்; சற்று பொறுத்து கொண்டு இரு; பூர்ணனே, கண்ணனே, எனக்கு காளமேகம் போன்ற உதாரனானவனே, கடல் போன்ற நிறத்தை உடையவனே, எனக்கு ரக்ஷகனானவனே முலை உண்ண வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment