திவ்ய பிரபந்தம்

Home

2.3.5 சோத்தம் பிரான் என்று இரந்தாலும்

சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரி குழலாரொடு நீ போய், * கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணம் கொண்டிடுவனோ நம்பீ, * பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட வொட்டில், * வேய்த் தடந் தோளார் விரும்பு கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய்.

பெரியாழ்வார் திருமொழி 2.3.5

உபகாரகனானவனே, உன்னை தொழுகிறேன் என்று வேண்டினாலும் அதை நீ அங்கீகரிக்கவில்லை; தீம்பீல் கை தேறினவனே, நீ சுருண்ட குழலை உடைய பெண்களோடே போய் கை கோத்து குரவை கூத்தாடி இங்கே வந்தால், அதை நான் குணமாக கொள்ளவேண்டுமா, உபகாரகனே, உன் காதில் திரியை இட விட்டால், பின்னையும் பெரியவையான அப்பங்களை தருவேன் ; (அதற்கும் அவன் வரவில்லை என்பதால், அவனை புகழ்ந்து), மூங்கில் போன்ற பெருத்து இருக்கும் தோள்களை உடைய பெண்கள் விரும்பும் படியான கருத்த குழலை உடைய விஷ்ணுவே, நீ இங்கே வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

குரவை கூத்து என்பது, ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்தில், ஒவ்வொரு கண்ணனாக இருந்தாடுவது போல ஒரு கூத்து. இதை ராசக்கீரீடை என்பார்கள்.

Leave a comment