வண நன்றுடைய வயிரக் கடிப்பிட்டு வார் காது தாழப் பெருக்கி, * குண நன்று உடையர் இக்கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய், * இணை நின்றழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து, * சுண நன்றணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.3.4
நன்றான வர்ணத்தை உடைய வஜ்ர குண்டலத்தை தரித்துக் கொண்டு நீண்ட காதானது, தோள் வரைக்கும் தாழும்படி (காதுகளை) வளர்த்துக் கொண்டு இந்த இடைபிள்ளைகள் (தாய்மார் முதலானோர் சொன்னதை செய்து) நல்ல குணம் உடையவர்களாய் இருக்கிறார்கள்; சுலபனானவனே, அப்பிள்ளைகளோடு சேர விரும்புகிற நீ, என் வார்த்தையை கேட்க மாட்டேன் என்கிறாய்; (சௌலப்யத்திற்காக கோவிந்தன் என்று பெயர் கொண்ட நீ என் பேச்சை கேட்க மறுக்கலாமா? என்கிறாள்). ஒன்றுக்கு ஒன்று ஓத்ததாய் மிகவும் அழகிய இந்த காதுப்பணிகளை நீ இட்டு கொண்டால், உனக்கு ருசிகரமான பலாப்பழத்தை கொடுத்து, மிகவும் அழகிய முலையை நீ உண்ணும் படி நான் கொடுப்பேன்; உபகாரகனானவனே, உன்னை தொழுகிறேன்; இங்கே வாராய்; என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணனைப் புகழ்ந்து அழைத்தும் அவன் வராததால், மற்றைய இடைப்பிள்ளைகள் காது பெருக்கிக் காதணிகளை அணிந்திருப்பதைக் காட்டி அந்த பிள்ளைகளை பாராட்டி ‘இவர்களைப் போல நீயும் தாய் சொல் கேட்டுக் காது பெருக்கிக் கொள்ளவேண்டாவோ? அப்படிக் காது பெருக்கிக் கடிப்பை அணிந்தால் நான் உனக்கு நல்ல பலாப்பழம் தருவதோடு முலையையும் உண்ணத் தருவேன்; உன்னைக் கும்பிடுகிறேன் நீ இங்கே வர வேணும்’ என்று கெஞ்சி அழைக்கிறாள். சோத்தம் என்பது ஸ்தோத்ரம் என்ற வடமொழி வார்த்தையின் திரிபு. சோத்தம் என்பது அஞ்சலி செய்பவர்கள் அதற்கு அனுகூலமாக தாழ்ச்சி தோற்ற சொல்லும் ஒரு சப்த விசேஷம்.
Leave a comment