வையம் எல்லாம் பெறும் வார் கடல் வாழும் மகரக் குழை கொண்டு வைத்தேன், * வெய்யவே காதில் திரியை இடுவன் நீ வேண்டியது எல்லாம் தருவன், * உய்ய இவ் ஆயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே. * மையன்மை செய்து இள ஆய்ச்சியர் உள்ளத்து மாதவனே இங்கே வாராய்.
பெரியாழ்வார் திருமொழி 2.3.3
யாவரும் உஜ்ஜீவிக்கும்படி இந்த இடைக்குலத்திலே ஆவிர்ப்பவித்தவனாய், மிக்க தேஜஸ் உடையவனாய், இடையர்களுக்கு தலைவனானவனே, பூமியெல்லாம் விலை பெறும்படி, பெரு விலையனாய், விசாலமான கடலில் வாழுகின்ற முதலைகள் போன்ற மகர குண்டலம் சேமித்து கொண்டு வந்தேன்; காதுகளில் திரியை கொஞ்சம் உஷ்ணமாக இடுவேன்; நீ விரும்புகிற பக்ஷணங்கள் எல்லாம் கொடுப்பேன்; இடைபெண்களை உன் வடிவழகாலே மதி மயங்கும் படி செய்து அவர்கள் நெஞ்சில் எப்போது இருப்பவனே, ஸ்ரீ பதியானவனே இங்கே வாராய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘எங்களையெல்லாம், உஜ்ஜீவிக்க வந்த மாதவா, நீ இப்போது திரியை போட்டுக் கொண்டால் பின்பு பொற்கடிப்பு மட்டும் அல்ல, பெரிய கடலில் வாழ்கின்ற சூறா மீனை போன்ற மிகச் சிறந்த மகர குண்டலங்களையும் கொண்டு வந்து உள்ளேன், அவற்றை நீ அணியலாம்; காது வலிக்காமல் இருக்க சிறிது சூடான திரியை இடுவேன்; நீ விரும்பும் பொருட்களை தருவேன்; நீ வர வேண்டும் ‘ என்று சொல்லி யசோதை அழைக்கும் வண்ணம் உள்ள பாசுரம்.
Leave a comment