திவ்ய பிரபந்தம்

Home

2.3.2 வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி

வண்ணப் பவளம் மருங்கினில் சாத்தி மலர்ப் பாதக் கிங்கிணி ஆர்ப்ப, * நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத நாராயணா இங்கே வாராய், * எண்ணற் கரிய பிரானே திரியை எரியாமே காதுக் கிடுவன், * கண்ணுக்கு நன்றும் அழகும் உடைய கனகக் கடிப்பும் இவையா.

பெரியாழ்வார் திருமொழி (2.3.2)

சென்ற பாசுரத்தில் காது குத்த அழைத்தாள்; இந்த பாசுரத்தில் காதில் நூல் திரியை இட அழைக்கிறாள்.  காதுகுத்தி நூல்திரியை இட்டுக் காதின் துவாரம் பெரிது ஆன பின்பு காதணிகளை இடுதல் வழக்கம்.

உன்னை அணுகி, தொழுகின்றவர்களுடைய மனதில் இருந்து நீங்காத நாராயணனே, நல்ல நிறத்தை உடைய பவழ வடத்தை அரையிலே தரித்து தாமரைப்பூ போன்ற திருவடிகளில் சாத்தி இருக்கிற சாதங்கையானது சத்தம் செய்யும்படி நான் அழைக்கும் இந்த இடத்திற்கு வந்து அருளாய்; இப்படிப்பட்டவன் என்று நினைக்கைக்கும் கூட அரியவனாகி, உபகாரகன் ஆனவனே, உன் காதுகளுக்கு திரியை நோவாதபடி இடுவேன்; பார்வைக்கு மிகவும் அழகு உடைய ஸ்வர்ணமயமான இந்த காது காப்புகள் (பூஷணங்கள்) ஆச்சரியமாக இருக்கின்றன என்பது இந்த பாடலின் பொழிப்புரை. இந்த காது காப்புகளை வந்து பார் என்ற யசோதை சொல்கிறார்.

உன்னை கிட்டி, உனக்கு கைங்கர்யம் செய்ய விரும்பி, அதனால் உன்னை தொழுது கொண்டு இருக்கின்றவர்களுடைய அடியவர்களின் மனதை, ‘நின்றும், இருந்தும், கிடந்தும் திரிதந்தும்‘ (பெரிய திருவந்தாதி 4.5) என்கிறபடி இஷ்டப்பட்டு ஒரு நொடியும் பிரியாதபடி என்றும் இருக்கும் நாராயணனே, நீ வண்ணம் நிறைந்த பவள வடத்தை இடுப்பில் சார்த்திய திருவரையும் பவளவடமும் சேர்ந்து அழகு தோன்றும்படியும், மலர் போன்ற பாதங்களில் அணிந்த சதங்கை ஒலிக்கும் படி இங்கே வா.

எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவனே, அடியவர்களுக்கு அனுகூலமாகவும் அடியவர்கள் அல்லாதவர்களுக்கு சுலபமாக அடைய முடியாதவனாகவும் இருக்கிறாய் என்கிறார். தன்னை மங்களாசாசனம் செய்பவர்களுக்கு தான் பெற்ற பேறு போல இருப்பதும் போல நீ என்னை அழைக்கிறாய் என்கிறார். நூல் திரியாய் எரிச்சல் வரும் என்றும் கண்ணன் சொல்வதாக கூறுகிறார். அந்த எரிச்சல் உண்டாகாதபடி உன் காதுகளில் இடுவேன், இப்படி காது துவாரங்களை பெரிது செய்தால், பின்பு கண்களுக்கு மிகவும் அழகுடைய பொன்னால் ஆன காது காப்பு (கர்ண பூஷணம் ) அல்லது பொன் கடிப்பு இட முடியும் என்று யசோதை சொல்வதாக அமைந்த பாசுரம்.

Leave a comment