திவ்ய பிரபந்தம்

Home

2.3.1 போய்ப் பாடுடைய நின் தந்தையும்

போய்ப் பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான் பொருதிறல் கஞ்சன் கடியன், * காப்பாரும் இல்லை கடல் வண்ணா உன்னைத் தனியே போய் எங்கும் திரிதி, * பேய்ப் பால் முலை உண்ட பித்தனே கேசவ நம்பீ உன்னைக் காது குத்த * ஆய்ப்பாலர் பெண்டுகள் எல்லாரும் வந்தார் அடைக்காய் திருத்தி நான் வைத்தேன்.

சென்ற பதிகத்தில், கண்ணன் தன்னுடைய பால பருவத்தின் குணமான பால் உண்ணுதலை மறந்து தூங்குகிறவனை எழுப்பி, முலை உண்ண வருமாறு அழைத்து, அவன் வராமல் இருந்தும், விடாமல் அவன் மேல் உள்ள பாசத்தால் அவனுக்கு பால் ஊட்டிய விவரத்தை ஆழ்வார் காலத்தில் நிகழ்ந்தது போல் பேசி அனுபவித்து இனியவன் ஆகிறார். இந்த பதிகத்தில் அவனுக்கு காது குத்தி, அதற்கு வேண்டிய பொருட்களை சேகரித்து அந்த திருவிழாவிற்கு ஆயர்பாடியில் உள்ள பெண்களையெல்லாம் அழைத்து, அவன் நோகும் என்று அஞ்சி, மாட்டேன் என்று மறுத்த போதும், அவன் அஞ்சாது இருக்க வார்த்தைகளை சொல்லியும், அவனுக்கு பிடித்த பொருட்களை காட்டியும் அவனை உடன்பட செய்தததை தன்னுடைய காலத்தில் நிகழ்வது போல அனுபவித்து ஆழ்வார் பாடும் பதிகம்.

இந்த பதிகத்தில் ஆழ்வார், எம்பெருமானுடைய பன்னிரெண்டு திரு நாமங்களை பன்னிரெண்டு பாடல்களில் அமைத்து அழைக்கிறார். கேசவ, நாராயணா, மாதவ, கோவிந்தா, விஷ்ணுவே, மதுசூதன, திரிவிக்ரம, வாமன, ஸ்ரீதர, ரிஷிகேஷ மற்றும் பத்மநாபா என்பவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடலில் வருகின்றன.

பெரியாழ்வார் திருமொழி 2.3.1

(பிள்ளைகளையும்) தங்களுடைய ஜனங்களையும் காப்பாற்றுவதில் பரிவை உடைய உன் தகப்பனும், பசு மேய்க்க போய், வருவதற்கு தாமதித்தான். யுத்தம் செய்தத்தக்க மிடுக்கை உடைய கம்ஸனானவன், உன்னிடத்தில் மிகவும் கொடூரமானவனாக இருந்தான். கடல் போன்ற வண்ணம் கொண்டவனே, உன்னை காப்பாற்ற வல்லவரும் (இங்கே) இல்லை. (நீயோ என்னவென்றால், தனியே) பயம் இல்லாமல், எல்லா இடங்களிலும் போய் திரிகிறாய். பூதனையின் மூலைப்பாலை உண்ட பித்தனே, கேசியை கொன்றவனே, தீம்பில் கைதேறியவனே, உன் காது குத்துகைக்கு திருவாய்பாடியில் உள்ள பாலர்களும், இடை பெண்களும் ஆகிய இவர்கள் எல்லோரும் வந்து இருக்கிறார்கள். (அவர்களுக்கு கொடுப்பவதற்கு) நான் அடைக்காய் முதலியவற்றை நான் வைத்து இருக்கிறேன் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

“கண்ணனே, நீ பிறந்த நாளில் இருந்து, உன்னை காப்பாற்றுவதில் திறமையான ‘கூர் வேல் கொடும் தொழிலன்‘ (திருப்பாவை 1) எனப்படும் உன் தகப்பனாரும், ‘உன் தொட்டிலின் கீழ் ஒரு எறும்பு ஊரினும், சிம்மத்தின் மேல் சீறுவது சீறும் உன் தந்தை, ‘பசுக்களின் பின்னே போய் வருகிறேன்; வருகிறவரையில் நீ பிள்ளையைக் காப்பாற்றிக் கொண்டிரு’ என்று சொல்லிச் சென்று இன்னும் வரவில்லை.  கம்ஸனோ உன் மேல் கோபம் கொண்டு எந்த சமயத்தில் யாரை அனுப்புவனோ, என்ன செய்வனோ, ஒன்றும் தெரியவில்லை; உபாயம் அறிந்து காப்பாற்றவல்ல வேறொருவரும் இங்கில்லை; நீயோ பயமறியாமல் தன்னோரயிரம் பிள்ளைகளோடு தளர்நடையிட்டு வருவான்‘ (பெரியாழ்வார் திருமொழி 3.1.1) என்றபடி எங்கும் திரிகின்றாய்;  பல பிள்ளைகளுடன் நான் திரிந்து கொண்டிருந்தால் என்னை யார் அறிவார் என்று நீ நினைக்க வேண்டாம் ; கடல் வண்ணா! உன் வடிவழகே உன்னை, நீ யார் என்று தெரிவிக்குமே; மேலும் பிள்ளைகளோடு விளையாடும் இடங்களில் திரிகின்றாய்; இப்படியெல்லாம் ஓடிப்போகாமல் கிட்டவா; உன்னைக் காதுகுத்த ஆய்ப்பாடிப் பெண்கள் எல்லாரும் வந்து இருக்கிறார்கள்; நான் அவர்கட்குக் கொடுக்க வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்திருக்கிறேன் ” என்று சொல்லி அழைக்கிறாள் யசோதை.

Leave a comment