ஓட ஓடக் கிங்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே, * பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாபன் என்றிருந்தேன், * ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி, * ஓடி ஓடிப் போய் விடாதே உத்தமா நீ, முலை உணாயே.
பெரியாழ்வார் திருமொழி 2.2.10
புருஷோத்தமன் ஆனவனே, (பால்யத்திற்கு உரியதான செருக்குடன்) மிகவும் பதறி ஓட திருவடிச் சதங்கைகள் ஒலிக்கும் ஓசை சப்தத்தாலே நிரந்தரமாக பாடிக்கொண்டும், அந்த பாட்டுக்கு தகுதியான நர்த்தனத்தை அதி கம்பீரமாய் அசைந்து அசைந்து ஆடிக் கொண்டு என்னை நோக்கி வருகிற உன்னை ‘இவன் பத்மநாபன் அன்றோ’ என்று ஆச்சர்யப்பட்டு கொண்டு இருந்தேன், (ஆனபின்பு,) ஓடியோடி போகாமல் நீ முலை உண்ண வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கூத்தை ஆடி என்று சொன்னதற்கு ‘குடக்கூத்தன் கோவலன் என்று‘ (திருவாய்மொழி, 2.7.3) என்பது மேற்கோள் சொல்லி அவன் நடக்கிற நடயே சிறந்த நடனம் என்கிறார். இவன் வேகமாக நடக்கிற போது, அவன் திருவடிக்களின் சதங்கை ஒலி, பாட்டாக ஒலிக்கின்றனது என்கிறார். அதோடு கிண்கிணிகளின் ஓசை தாளமாக, வாயாலே பாடிப் பாடி அதனுக்கு ஏற்ற கூத்தை அசைந்து அசைந்து ஆடியது சொல்கிறார்.
இவன் நடக்கிற நடையெல்லாம், வல்லார் ஆடியது போல உள்ளது என்கிறார். ‘கொப்புழில் எழு கமல பூ அழகர்‘ (நாச்சியார் திருமொழி 11.2) என்றபடி, வேறு ஒரு ஆபரணம் தேவை இல்லாமல், நாபி கமலமே ஆபரணம் போல் அழகாக இருக்கும் என்கிறார்.
அழிந்து கிடந்தவைகளை ஆக்குபவன் ஆகையால், என்னுடைய சக்தையை தருவதற்காக வருகிறான் என்று இருந்தேன் என்று யசோதை சொல்வதாக சொல்கிறார். ‘இவள் நம்முடைய நீர்மையை சொல்லாமல் மேன்மையை சொல்கிறாளே’ என்று அவன் மீண்டும் ஓடி போக தொடங்குகையாலே, இப்படி ஆடி ஓடி போய் விடாதே, புருஷோத்தம, வா என்று கூறுகிறாள்.
Leave a comment