திவ்ய பிரபந்தம்

Home

2.2.6 மின்னனைய நுண்ணிடையார்

மின்னனைய நுண்ணிடையார் விரிகுழல் மேல் நுழைந்த வண்டு, * இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிதமர்ந்தாய் உன்னைக் கண்டார், * என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள், * என்னும் வார்த்தை எய்து வித்த இருடீகேசா முலை உணாயே.

பெரியாழ்வார் திருமொழி 2.2.6

மின்னலைபோல் இருக்கும் மிக நுண்ணிய இடையை உடைய பெண்களிடையே விரிந்த பரந்த கூந்தலின் மேல் மது பானம் அருந்த அமர்ந்த வண்டுகள் இனிமையாக இசை பாடும் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவுள்ளம் பொருந்தி சேவை சாதிப்பவனே, உன்னை பார்த்தவர்கள், இவனைப் பெற்ற வயிற்றை உடையவள், என்ன நோன்பு நோற்றாளோ, (இதற்காக) என்ன தவம் செய்தார்களோ, என்று புகழ்ந்து சொல்லும் வார்த்தைகளை எனக்கு கிடைக்கும்படி செய்த இருடிகேசா, வந்து முலை உண்ணாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

ஸ்ரீவில்லிபுத்தூரில், பரமபதத்தைக் காட்டிலும் இனிதாக பொருந்தி வாழ்பவனே என்கிறார். பரமபதத்தில் மோக்ஷம் அடைந்தார்களுக்கு மட்டுமே தரிசனம் கொடுக்கிறான் என்றும், இங்கே தாழ்ந்தார்களுக்கும் முகம் கொடுப்பதால், இங்கே பொருந்தி வாழ்கிறான் என்கிறார்.

கண்டவர்களுடைய சர்வ (எல்லா) இந்திரியங்களையும் வீணாகக்காமல் தன் வசமாக்கிக் கொள்ளும் பண்பை இருடிகேசன் என்பதற்கு விளக்கமாக சொல்கிறார்.

Leave a comment