திவ்ய பிரபந்தம்

Home

2.2.5 தீயபுந்திக் கஞ்சன்

தீயபுந்திக் கஞ்சன் உன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து, * மாயந்தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா, * தாயர் வாய்ச்சொல், தருமம் கண்டாய் சாற்றிச் சொன்னேன் போக வேண்டா, * ஆயர்பாடிக்கு அணிவிளக்கே அமர்ந்து வந்து என் முலையுணாயே.

பெரியாழ்வார் திருமொழி 2.2.5

வாசுதேவனின் மகனே, தீய புத்தி உடைய கம்ஸன் உன்மேல் கோபம் கொண்டு இருந்தான். நீ தனியே இருக்கும் சமயம் பார்த்து, மாயங்கள் செய்து உன்னை (நழுவாதபடி) வலைபடுத்தி பிடித்து கொண்டால், (பிறகு நான்) உயிர் தரிக்க மாட்டேன். தாய்மார்களுடைய வார்த்தைகள் பிள்ளைகளுக்கு மிகவும் அவசியம் ஆகும். (ரகசியமாக இல்லாமல்), எல்லோரும் அறியும்படி வெளிப்படையாகச் சொன்னேன். ஆகவே நீ தனியே விளையாடுவதற்கு எங்கும் போக வேண்டாம்; திருஆயர்பாடிக்கு மங்கள தீபமானவனே, (இருளை போக்குபவனே), பொருந்தி வந்து உனக்காக சுரந்திருக்கிற என் முலை உண்ணாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கம்சனை, ‘மக்கள் அறுவரைக் கல்லிடை மோதின பாவி’ என்கிறார். தேவகியின் எட்டாவது கர்ப்பம் உனக்கு எதிரி, என்று சொன்னதாலும், பின்பு துர்க்கை சொல்லிப்போனதாலும், ‘நமது எதிரி நம்மிடம் இருந்து தப்பி, நாம் அடைய முடியாத இடத்தில் இருக்கிறான், வேறு விதத்தில் கஷ்டபடுத்த வேண்டும்’ என்று உன் மேல் கோபத்துடன் இருக்கிறான் என்கிறார். நீ கவலையின்றி திரியும் போது, மரங்களிலும், செடிகளிலும், மிருகங்களிலும் அசுரர்களை ஏற்றி நீ அறியாமல் உன்னை வஞ்சனையால் நழுவவிடாமல் பிடித்துக்கொள்வான் என்றால், தான் ஜீவித்து இருக்க மாட்டேன் என்று யசோதை சொல்வதாக உள்ள பாட்டு.

உனக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்தால், இந்த திருவாய்ப்பாடி முழுவதும் இருள் சூழ்ந்து விடும் என்கிறார்.

Leave a comment