கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச்சகடு கலக்கழிய, * பஞ்சியன்ன, மெல்லடியால் பாய்ந்தபோது நொந்திடுமென்று, * அஞ்சினேன் காண், அமரர் கோவே ஆயர் கூட்டத்தது அளவன்றாலோ, * கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய் முலையுணாயே.
பெரியாழ்வார் திருமொழி 2.2.4
தேவாதி ராஜனே, (உன் மேல் குறியாக) கம்சனாலே (உன்னை கொல்வதற்காக) கற்பிக்கப்பட்ட கள்ளத்தனமான சகடமானது, சந்திபந்தங்கள் குலைந்து உருமாய்ந்து போகும்படி, பஞ்சு போன்ற மிருதுவான திருவடிகளாலே உதைத்த காலத்தில் (உனக்கு) நோவு உண்டாகும் என்று பயப்பட்டேன்; நான் பயப்பட்டது இடையருடைய கூட்டம் பயப்பட்ட அளவல்ல; ஐயோ, உன் விஷயத்தில் வஞ்சனைகளைச் செய்த கம்சனை, நீ அவன் விஷயத்தில் செய்த வஞ்சனையினாலே, தப்பாதபடி அகப்படுத்தி முடித்தவனே, முலை உண்ண வா என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘தளர்ந்தும் முறிந்தும் உடல் வேராகப் பிளந்து வீய ‘ (திருவாய்மொழி 6.9.4) என்ற படி சகடாசுரனை உதைத்தது சொல்லப்படுகிறது. தேவர்களுக்கு நிர்வாககனனே, உன்னை கொண்டு தங்கள் விரோதிகளைப் போக்கி, வாழவிருக்கிறவர்கள் பாக்கியத்தாலே உனக்கு ஒரு நோவும் வராமல் இருந்தது என்கிறார்.
தேவர்களுக்கு தலைவனே, கம்சனால் உன்னை கொல்வதற்காக அனுப்பப்பட்ட சகடாசுரன் என்பவனை உதைத்து தள்ளிய போது உன்னுடைய திருவடிகளுக்கு நோவு ஏற்படுமே என்று கவலை உற்றேன் நான். என்னுடைய கவலை ஆயர்களின் அச்சத்திற்கு ஒரு அளவல்ல, உன்னை கொல்ல பல வஞ்சனைகள் செய்த கம்சனை, வஞ்சனையால் கொன்ற கண்ணனே, மூலை உண் என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.
Leave a comment