தம் தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்க கில்லார், வந்து நன் மேல் பூசல் செய்ய வாழவல்ல வாசுதேவா, உந்தையார் உன் திறத்தரல்லர், உன்னை நானொன்று உரப்ப மாட்டேன், நந்த கோபன் அணி சிறுவா நான் சுரந்த முலையுணாயே.
பெரியாழ்வார் திருமொழி 2.2.3
(கண்ணன் பிள்ளைகளோடு விளையாடப் போனால், அந்த பிள்ளைகளை அடித்துக் குத்தி விளையாடுவதால்), தங்கள் தங்களுடைய பிள்ளைகள் அழுது கொண்டு போனால், அவர்களின் தாய்மார்கள் (மனம்) பொறுத்து இருக்க மாட்டார்கள்; ஊரார், தங்கள் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு வந்து, ஸ்ரீ வாசுதேவர் திருமகனான கண்ணனே, உன் தந்தை, உன் சேஷ்டைகளை நோக்கும் தன்மை உடையவர் அல்லர். நானும் பெரும் தீம்பனான உன்னை ஒருபடியாகவும் ‘நீ என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல (அதட்ட) வலிமை அற்று இருக்கிறேன்’, (அவையெல்லாம் கிடக்க), நந்தகோபனின் அழகிய புதல்வனே, (இப்போது) நான் சுரந்திருக்கும் முலையை உண்பாயாக என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
வாசுதேவா என்பதற்கு, வசுதேவருடைய புத்திரன் ஆனவனே, பசுவின் வயிற்றில் புலியாய் வந்து பிறந்தாயே என்கிறார்.
Leave a comment