வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடி தயிரும் நறு வெண்ணெயும், * இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான் நீ பிறந்த பின்னை, * எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே, * முத்தனைய முறுவல் செய்து மூக்குறுஞ்சி முலையுணாயே.
எனக்கு ஸ்வாமியானவனே, நீ எனக்கு பிள்ளையாக வந்து பிறந்ததற்கு பின்பு, உருக்கி வைத்த நெய்யும், ஏடு வரும்படி காய்ச்சி வைத்த பாலும், கெட்டியாக தோய்த்த தயிரும், மணம் மிக்க வெண்ணையும் (ஆகிய) இவற்றில் ஒன்றும் நான் பெற்று அறியவில்லை. உனக்கு தோன்றினபடி எல்லாம் நீ வேண்டியதை செய்யலாம், நான் உன்னை பிடித்து அடித்தல் போன்ற ஒன்றும் செய்ய மாட்டேன்; நீ கோபித்து கொள்ள வேண்டாம், முத்து போன்ற வெண்மை நிறம் தெரியும் படி ஒரு சிறு புன்முறுவல் செய்து கொண்டு, மூக்காலே உரசிக்கொண்டு, முலை உண்பாயாக என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
Leave a comment