அரவணையாய் ஆயரேறே அம்மம் உண்ணத் துயில் எழாயே, * இரவும் உண்ணாது உறங்கி நீ போய் இன்று முச்சி கொண்டதாலோ, * வரவும் காணேன் வயிறு அசைந்தாய் வனமுலைகள் சோர்ந்து பாய, * திருவுடைய வாய் மடுத்துத்து இளைத்து தைத்துப் பருகிடாயே.
எல்லா ஆழ்வார்களுமே கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தாலும், இந்த ஆழ்வார் அதீத ஈடுபாடு கொண்டவர் ஆதலால், இந்த அவதாரத்தில் எந்த ரசனையையும் விடாமல் ரசித்து யசோதை, கேசம் முதல் பாதம் வரை அனுபவித்த அழகை, தானே அனுபவித்தாக பாடி மகிழ்ந்தவர், அவனை தொட்டிலில் இட்டு தாலாட்டியது, அவன் சந்திரனை அழைத்தது, செங்கீரை ஆடுகை, சப்பாணி கொட்டியது, தளர்நடை நடத்தல், அச்சோ என்று முன்னால் வந்து கட்டிக்கொள்வது, ஓடி வந்து முதுகை கட்டிக்கொள்வது என்று அவன் விளையாடிய ஆட்டங்களை சொன்ன யசோதை, அவன் அப்பூச்சி காட்டியதையும் கடந்த பதிகத்தில் தெரிவித்தார். இந்த பதிகத்தில் குழந்தை பால் உண்ணாமல் மறந்து அயர்ந்து தூங்குவதை கண்டு அவன் பால் மற்றும் அன்னம் உண்ண துயில் எழுப்புவதை பாடி மகிழ்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி (2.2.1)
திருஅனந்தாழ்வானை படுக்கையாக உடையவனே, இடையவர்களுக்கு தலைவன் ஆனவனே, முலைப்பால் உண்ண, திருப்பள்ளியில் இருந்து எழுந்திருக்க வேண்டும், நீ நேற்று இரவும் மூலை உண்ணாமல் உறங்கி போனது மட்டும் இன்றி இன்றும் நடுப் பகலான பிறகும், (நீயாக எழுந்திருந்து அம்மம் உண்ண வேண்டும் என்று) வருவதையும் நான் காணவில்லை. வயிறு தளர்ந்து நின்றாய். அழகிய முலைகள் பால் சொரிந்து பாயும் படி அழகு பொருந்திய திருப்பவளத்தை வைத்து கர்வத்துடன் உன்னுடைய திருகால்கள் என்னுடைய உடம்பில் உதைத்து கொண்டு பானம் செய்ய வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மென்மை, குளிர்ச்சி, வாசனை என்று திருவனந்த ஆழ்வானின் படுக்கை உள்ளது என்கிறார். அந்த படுக்கையில் படுத்ததனால், இங்கு ஆயர் ஆன இடத்திலும் படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் இல்லை என்கிறார். அனந்தாழ்வான், ‘சென்றால் குடையாம்‘ (முதல் திருவந்தாதி 53) என்றபடி இங்கும் படுக்கையாகவும் அதன் பண்புகளையும் தொடர்ந்து கொடுத்து கண்ணன் நன்கு பள்ளி கொள்ளும்படி கைங்கர்யம் செய்கிறான்.
Leave a comment