திவ்ய பிரபந்தம்

Home

2.1.9 பதக முதலை வாய்ப் பட்ட களிறு

பதக முதலை வாய்ப் பட்ட களிறு, * கதறிக் கை கூப்பி என் கண்ணா கண்ணா என்ன, * உதவப் புள் ஊர்ந்து அங்கு உறு துயர் தீர்த்த, * அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பெரியாழ்வார் திருமொழி 2.1.9

கொடியதான முதலையின் வாயில் அகபட்ட ஸ்ரீ கஜேந்தராழ்வான் கதறிக்கொண்டு அஞ்சலி பண்ணி, எனக்கு நிர்வாககன் ஆனவனே, என்று பலகாலும் கூப்பிட அந்த ஆபத்தான காலத்தில் உதவுவதற்கு பெரிய திருவடி நாயனரை (கருடன்) வேகமாய் நடத்திக் கொண்டு சென்று அந்த குளத்தில் முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்ட ஸ்ரீ கஜேந்தரன் பட்ட துயர் நீக்கின மிடுக்கனானவன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பதகம் என்றால் கொடிய, ஆகவே கொடிய வாய் விலங்கு என்று முதலை ஆயிற்று. ‘அதன் விடத்தனுக்கு அனுங்கி அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த‘ (திருப்பள்ளிஎழுச்சி 2 ) என்றபடி கஜேந்திர ஆழ்வானை நோவு படுத்திய கொடுமையை சொல்கிறது. பாதகம் உடைத்தான முதலை என்றும், அதனுடைய சாபம் தீர இதுவே வழி என்று அறிந்து, இதன் காலை பிடித்த பிடி நழுவாதபடி தன்னுடைய கோரை பற்களை யானையின் கால்களில் ஊன்றியது. நீர், தன் நிலம் இல்லாமையால், அதன் வாயில் அகப்பட்ட யானையானது நீர்புழுவின் கையில் அகப்பட்டது ஆயிற்று.

முதலையின் வாயில் அகபட்ட உடன், தன் பலத்தாலே கரை ஏறுகிறோம் என்று ஆயிரம் தேவ வருடங்கள், அது நீருக்கு இழுக்க, இது கரைக்கு இழுக்க சென்றது. இது பலம் இழந்து, துதிக்கை மூழ்கும் அளவிற்கு சென்ற பின், இனி நம்மால் செய்வது ஒன்றும் இல்லை என்று, சர்வேஸ்வரனையே தனக்கு ரக்ஷகனாக நினைத்து தன் கையை எடுத்து அஞ்சலி பண்ணி, தன் வேதனை எல்லாம் தோன்றும்படி, என் நிர்வாககனனே என்று பலமுறை கூப்பிட்டுக் கொண்டு கதறியது. திருமங்கை ஆழ்வார் ‘நாராயணா ஓ மணிவண்ணா, நாகணையாய், வாராய்‘ (சிறியதிருமடல்,21) என்று அருளி செய்தார்; இந்த ஆழ்வார், ‘என் கண்ணா, என் கண்ணா’ என்று கூப்பிடுகிறார்.

இந்த துன்ப ஒலி, திருச்செவி பட்டபோதே, திருப்படுக்கையில் இருந்து பதறி எழுந்து, சேனை முதலியார் திருக்கை கொடுக்கவும், அதனை பற்றாமல், திருவடி நிலை கோத்து எழுந்தருளி, வெறும் தரையிலே பத்தடி இட்ட பதற்றத்தை கண்டு, இது ஏன் என்று திரு அந்தபுரம் கை நெரிக்க, பெரிய திருவடியை பண் செய்து, ஏறப் பெறாமல், வெறும் புறத்திலே மேற்கொண்டு, ‘அந்த ஆர்த்திக்கு உதவ வேண்டும்’ என்று விரைந்து நடத்திக் கொண்டு சென்று அந்த பொய்கையில் முதலையின் கைக்கு அகப்பட்டு ஸ்ரீ கஜேந்தரன் பட்ட அதிகமான துக்கத்தை போக்கியவன் என்கிறார். கஜேந்தரன் துக்கமாவது, துதிக்கையில் உள்ள பூ எம்பெருமானுக்கு சமர்ப்பிக்காமல் வீணாக போகின்றதே என்பதாகும்.

அதகன் என்பது மிடுக்கன் என்பதாகும். ஆதாவது இப்படி ஆச்சரியமான ரக்ஷணம் பண்ணின விசேஷ சக்தியை சொல்கிறது.

Leave a comment