திவ்ய பிரபந்தம்

Home

2.1.10 வல்லாள் இலங்கை மலங்கச்

வல்லாள் இலங்கை மலங்கச் சரந் துரந்த, * வில்லாளனை விட்டுசித்தன் விரித்த, * சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல் இவை பத்தும், * வல்லார் போய் வைகுந்தம் மன்னி இருப்பரே.

பெரியாழ்வார் திருமொழி 2.1.10

வலிய ஆட்களை உடைய லங்கா புரியானது கலங்கும்படி, பாணங்களை ஏவின வில்லை ஆண்டவனை பெரியாழ்வார் பரப்பி அருளி செய்தவையாய் சொற்களால் நிறைந்து இருப்பதாய் அப்பூச்சி விஷயமான பாட்டுக்களாய் இருக்கிற இப்பத்தையும் அதிகரிக்க வல்லவர்கள் பிரகிருதி மண்டலத்தை கடந்து போய், ஸ்ரீ வைகுந்தத்திலே பொருந்தி இருப்பார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இராவணன் மதிக்கும் படி ஆண்பிள்ளை நிறைந்த ஊர் என்கிறார். சரந் துரந்த வில்லாளனை என்று சொல்வதால், அவதாரத்திற்கு அனுகுணமான அம்புகளினால் அவ்வூரை அடர்த்த ஆண்பிள்ளை தனத்தை சொல்கிறது. இராமாவதாரத்திற்கும் கிருஷ்ணாவதாரத்திற்கும் உள்ள ஐக்கியத்தை சொல்கிறது. கானடை அங்கண்ணன் (பெரியாழ்வார் திருமொழி 2.1.8) என்று இந்த ஐக்கியம் மேலும் சொல்லப்பட்டு உள்ளது.

வலிமை பொருந்தியர்வர்கள் இருந்த இலங்கையை பாழக்கிய இராமனை (கண்ணனுக்கு முன் அவதாரம்) விட்டுச் சித்தன் பாடிய இந்த பாடல்களையும் சொல்பவர்கள் (சொற்களை சொன்னால் போதும், அர்த்தம் தெரிந்து சொல்ல வேண்டும் என்றில்லை), திருவைகுந்தம் சென்று என்றென்றும் இருப்பார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment