தத்துக் கொண்டாள் கொலோ தானே பெற்றாள் கொலோ, * சித்த மனையாள் அசோதை இளஞ் சிங்கம், * கொத்தார் கருங்குழல் கோபால கோன் அரி, * அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பெரியாழ்வார் திருமொழி 2.1.7
இந்த பிள்ளையை ஸ்வீகார புத்திரனாக வளர்த்து வருகிறாளோ அல்லது தானே உடம்பு நோக பெற்று கொண்டாளோ, தன் கருத்துக்கு ஒத்து நடக்குமவளான யசோதையின் வயிற்றில் பிறந்தவனாய் பாலசிங்கம் போல் நின்றவனாய், பூங்கொத்துக்களால் நிறைந்து நின்ற, கறுத்து இருந்த கேசம் உடையவனாய், இடையர்களுக்கு மிடுக்கை உடைய சிம்மம் போன்றவனாய் ஸ்வாமியானவன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
யசோதை இந்த பிள்ளையை தத்து புத்ரனாக வளர்த்து கொள்கிறாளோ அல்லது தன்னுடைய உடல் நோகும்படி பெற்றுக்கொண்டாளோ, யசோதையின் இளம் சிங்கம் போன்ற கண்ணன், கரிய கூந்தலை உடையவனான கண்ணன், அவன் தோழர்களுக்கு அடங்காத சிங்கம் போன்ற கண்ணன், ஸ்வாமியான கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் என்று பாடுகிறார்.
யசோதை மோகித்து கிடந்து உணர்ந்த பின்னரே இவனை கண்டது; இதனால் இவள் பெற தோழிகளும் பார்க்கவில்லை; இவளும் பார்க்கவில்லை; இவனுடைய உலகத்தில் இல்லாத குணவிசேஷங்களை பார்க்கும் போது, ‘இவள் பிள்ளை ‘ என்று சொல்ல முடியாதபடி இருப்பதாலும், யசோதையே ‘இம் மாயம் வல்ல பிள்ளை நம்பி உன்னை, என் மகனே என்பர் நின்றார்‘ (பெரியாழ்வார் திருமொழி 3.1.3) என்று இவனுடைய சேஷ்டிதங்களை கண்டால் நீ என்னுடைய பிள்ளையாகக்கூடாது, நடு நின்றவர்கள் உன்னை என்னுடைய பிள்ளை என்றே சொல்கிறார்கள் என்னும்படி சொல்லியதை இங்கே குறிப்பிடப்பட்டு உள்ளது.
தீம்பு கண்டாலும், அவனை குற்றம் சொல்லாமல் தன் நெஞ்சுக்கு ஒத்து நடக்கும் யசோதையின் பிள்ளையாய் பால சிங்கம் போல அவளுக்கு அடங்காதே திரிக்கிறவன் என்றும், அப்படியே குற்றத்தை ஏற்று கொண்டாலும் ‘இப்படி எல்லாம் தீமைகள் செய்வார்களோ நம்பி ! ஆயர் மட மக்களை ‘ என்று இவன் தீமபிலே கை வளரும்படி விடுவது என்றும் சொல்கிறார்.
உகந்தார் உகந்தபடி சூட்டின பூங்கொத்து நிறைந்து இருப்பதாய், கரிய திருக் குழலை உடையவனாய், நந்தகோபலர் கீழ் அடங்காமல், மிடுக்கை உடைய சிங்கம் போல செருக்குடன் திரிபவன், தாய்க்கு அடங்காதவன் ஊருக்கு அடங்காதவன் என்றும் குறிப்பிடுகிறார். அத்தன் என்று சொல்லி, ஸ்வாமி என்ற பொருளுடன், மேலே சொன்ன ஸ்வபாவங்களுக்கு தோற்று சொன்ன வார்த்தை என்று விளக்கம் கொடுக்கிறார்.
Leave a comment