திவ்ய பிரபந்தம்

Home

2.1.6 செப்பிள மென்முலைத் தேவகி

செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு, * சொப்படத் தோன்றித் தொறுப்பாடியோம் வைத்த, * துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் வந்து * அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பெரியாழ்வார் திருமொழி 2.1.6

தேவகிப் பிராட்டிக்கு மகனாக பிறந்து, திருஆயர்பாடியில் நாங்கள் வைத்துஇருந்த பாலும், தயிரும் நெய்யையும் விழுங்கிய கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் என்று பாடுகிறார்.

செப்பு போல இருக்கிற, இளையதாய் மிருதுவாக இருக்கிற ஸ்தனங்களை உடைய ஆத்ம குண பூரணமாக உள்ள தேவகிக்கு நன்றாக பிரகாசித்து தோன்றி, திருஆய்பாடியில் உள்ள நாங்கள் சேமித்து வைத்த நெய்யையும் பாலையும் தயிரையும் அமுது செய்த உபகாரனாக கிருஷ்ணன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இப்போது கிருஷ்ணன் அமுது செய்வதற்கு யோக்யமாக தேவகியின் முலைகள் உள்ளன என்பதை தெரிவிப்பதற்காக இங்கே அவற்றை பற்றி சொல்கிறார். நங்கை என்று சொன்னது,

  • வரும் விளைவுகளை அறியவல்ல அறிவு உள்ளமை
  • பிள்ளை துன்பப்படக் கூடாது என்று நோக்கவல்ல பாசம்
  • மற்றவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நல்ல குணம்

சர்வேஸ்வரன் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று நோன்பு நோற்று பெற்றதற்கு ஈடாக, ஈஸ்வர சின்னங்களான சங்கு சக்கரம் முதலியவைகளுடன் தோன்றியதை ‘சொப்படத் தோன்றி ‘ என்கிறார்.

துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய அப்பன் என்று சொன்னது, எல்லாவற்றையும் ஒருசேர விழுங்கியதை சொல்கிறது. தூஞ்சின நெய்யும், காய்ச்சின பாலும், தயிரும் திரவியமாய் அமுது செய்வதற்கு ஏற்ற வகையில் உள்ளதை சொல்கிறது.

Leave a comment