திவ்ய பிரபந்தம்

Home

2.1.4 இருட்டில் பிறந்து போய்

இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர், * மருட்டைத் தவிர்ப்பித்து வஞ்சகன் மாளப், * புரட்டி அந்நாள் எங்கள் பூம்பட்டுக் கொண்ட, * அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.

பெரியாழ்வார் திருமொழி 2.1.4

இருட்டில் திருஅவதாரம் செய்து (பின்) திருவாய்ப்பாடி சென்று, தன்பக்கல் ஸாபல்யம் உடையவராய், கிருஷ்ணன் சம்பந்தத்தால் உண்டான பலத்தை உடைய இடையர்களுடைய மதி மயங்கி பேசும் பேச்சுக்களை தவிர்த்து, கடுமையான நெஞ்சத்தை உடைய கம்ஸன் இறந்து போகும் படி தலை முடியை தூக்கிப் பிடித்து புரட்டி பனி நீராட்டின அந்த நாளில் எங்களுடைய அழகிய பட்டுக்களை வாரிக்கொண்டு போன தீம்பனானவன் அப்பூச்சி காட்டுகின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

வீங்கிருள்வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப் போய் ஆங்கோர் ஆய்க்குலம் புக்கதும்‘ (திருவாய்மொழி 6.4.5) என்கிறபடியே, அன்று அடர்ந்த இருளிலே பெற்ற தாயானவள், காலை கட்டிகொண்டு கதறி அழுததும், திருவாய்பாடி சென்றதும் சொல்லப்பட்டது.

அருகில் இருப்பவர் கண்களுக்கு தெரியாத அளவு இருள் நிறைந்த இரவில், கண்ணில் தெரிந்தால் ஹிம்சை செய்ய, உருவிய வாளுடன் இருக்கும் கம்சனின் ஆட்கள் இருக்கின்ற வடமதுரையில் தேவகிக்கு புதல்வனாக பிறந்ததை சொல்கிறார். ஏழை வல்லாயர், மருட்டைத் தவிர்ப்பித்து என்று சொன்னதன் மூலம் தன்னை பற்றி இருக்கும் பலத்தை உடையவர்களான ஆயர்கள், தாங்களே கம்சனை அழிக்க வல்லாரை போல பேசினாலும் அவற்றை தவிர்த்து, ‘நீங்கள் எல்லோரும் வேண்டுமோ, நானே செய்கிறேன்’ என்று சொல்லும்வண்ணம் செய்த உத்திகளை சொல்கிறார்.

அப்படி உத்தி மட்டும் இன்றி, தன்னை அழைத்து கொண்டு போக வந்த அக்குரனுடன் வடமதுரைக்கு எழுந்தருளி விழாவிற்கு என்று அழைத்து விட்டு, வழியில் குவாலயாபீடத்தையும் மல்லரையும் நிறுத்தி தான் உயர்ந்த நிலத்திலே இருந்து பார்த்து கொண்டு இருந்த வன் நெஞ்சம் கொண்ட கம்ஸன் முடியும்படி அவன் வழியிலே நிறுத்திய விரோதிகளை முடித்து அவன் இருக்கிற ஸ்தலத்திற்கு பாய்ந்து அவன் அபிஷேகத்தை தட்டி விட்டு, தலை முடியை பிடித்து இழுத்து கீழே பூமியில் விழச் செய்து அவன் மேல் குதித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த (பெரிய திருமொழி 3.10.3) என்றபடியே நிலத்தில் புரட்டி அழித்ததை சொல்கிறார்.

Leave a comment