காயும் நீர் புக்குக் கடம்பேறி காளியன், * தீய பணத்தில் சிலம்பு ஆர்க்கப் பாய்ந்து ஆடி, * வேயிங் குழல் ஊதி வித்தகனாய் நின்ற, * ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பெரியாழ்வார் திருமொழி 2.1.3
காளியன் என்ற விஷ பாம்பின் உஷ்ணத்தால் கொதிக்கின்ற மடுவின் ஜலத்திலே புகுந்து அருகே நின்ற கடம்ப மரத்தின் மேல் ஏறி காளிய நாகத்தினுடைய கொடியதான படத்திலே திருவடி சிலம்புகள் கலகலவென்று சப்திக்கும்படி குதித்து கூத்தாடி வேய்ங்குழலை ஊதி, வித்தகனாய் நின்ற இடைபிள்ளையான கண்ணன் வந்து அப்பூச்சி காட்டுகிறான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
காளிங்கனின் தடாகத்தை கலக்கி, காளியன் தலை எடுக்கும்படி செய்து, அந்த விஷ உஷ்ணத்தினால் பட்டுப் போன கடம்ப மரத்தை, தன்னுடைய கிருபையினால் தளிர்க்க செய்து அதன் மேல் ஏறி, காளிங்கனுடைய படத்தில் திருவடிகளின் திருசிலம்பு ஒலிக்கும்படி குதித்து அவன் படம் எடுக்கும் பணங்கள் நெரிந்து வாய்களால் ரத்தம் சொரியும்படி செய்து அவன் சரணம் புகும்படி அதன் மேல் குதித்து நர்த்தனம் செய்ததை சொல்கிறார். என்ன ஆகப்போகிறதோ என்று கவலைப்பட்ட அனுகூல ஜனங்கள் பிரீதராய் வாழும்படி திருக் கையினால் குழலூதி வித்தகனாய் நின்றவன் என்கிறார்.
‘கடு விடமுடைய காளியன் தடத்தைக் கலக்கி முன் அலக்கழித்து, அவன் தன் படமிறப் பாய்ந்து பன்மணி சிந்தப் பல்நடம் பயின்றவன்‘ (பெரிய திருமொழி 4.10.3)ல் சொல்லியபடி, தடாகத்தைக் கலக்கி, அந்த தலையில் நடனம்ஆடி, அவன் மீண்டு எழும்போது, நன்றி உடையவனாய் எழுந்தான் என்கிறார்.
Leave a comment