மலை புரை தோள் மன்னவரும் மா ரதரும் மற்றும், * பலர் குலைய நூற்றுவரும் பட்டழிய பார்த்தன், * சிலை வளையத் திண் தேர் மேல் முன்னின்ற செங்கண் * அல வலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.
பெரியாழ்வார் திருமொழி 2.1.2
மலைபோல் வலிமையான தோள்களை உடைய அரசர்களான பீஷ்மர் முதலிய மகாரதர்களும் மற்றும் பல அதிரத மகாரதர்களும் நடுங்கும்படியும் துரியோதனன் முதலிய நூறு சகோதர்களும் வேர் அற்ற மரம் போல அழிந்து போகும்படியும், அழகிய அர்ஜுனனின் வில்லான காண்டீபம் வளையும் படியும், அந்த அர்ஜுனனின் தேரின் மேல் முன்னே நின்று சாரதியாய் செலுத்திய சிவந்த கண்களை உடையவனாய், அவன் வெற்றியை சொல்லி புகழும் கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணன் சாரத்தியம் செய்ய ரதம் ஏறினான் என்று கேட்டபோதே ‘நாம் இன்னும் ஜீவிக்கை என்று ஒன்று உண்டோ’என்று எண்ணினார்கள் என்கிறார். அரசர் என்றும் நூற்றுவர் என்று தனிதனியே சொல்லியதால் இவர்கள் எல்லோரையும் அழித்தாலும், நூற்றுவர் மேல் உள்ள தனிக் கோபம் சொல்லப்பட்டது. கிருஷ்ணனின் சகாய பலத்தால் தான் அர்ஜுனன் வில் வளைத்து பீஷ்மர் முதலியோர் மீது போர் தொடுத்தது என்கிறார். அர்ஜுனனுக்கு எதிரிகள் கடினமான தாக்குதல் நடத்தினாலும் அவை கண்ணனின் திருவடி சம்பந்தத்தால் அவை தேரில் மேல் பட்டு அர்ஜுனனுக்கு ஆபத்து விளைவிக்காமல் வீழ்ந்தன என்பதை ‘திண் தேர்’ என்பதன் மூலம் சொல்கிறார்.
தான் சாரத்தியம் செய்த சாமர்த்தியத்தாலே எதிரிகளை வென்று அந்த வெற்றியையும் அர்ஜுனனுக்கு வழங்கி, வாத்சல்யம் தோன்ற அவனை நோக்கி, அவனை புகழ்பவன் என்பதை செங்கண் அலவலை என்பதன் மூலம் சொல்கிறார்.
அலவலை என்றதன் மூலம், அர்த்த கௌரவமும், அதிகார கௌரவமும் பாராமல் தன் நெஞ்சில் தோன்றியதை பிரதிபலிக்கிறான் என்கிறார். சரணாகதி ஆனவள் கூந்தல் முடிப்பதற்காக, பலர் குலையவும், பலர் பட்டழியவும், சிலை வளையவும், தேர் முன் நின்று சாரத்தியம் செய்து, அடியவர்களின் எதிரிகளை அழித்து, அடியவர்களுக்கு காரியம் செய்யும் சுபாவம் உடையவன் அப்பூச்சி காட்டுகின்றான் என்கிறார்.
Leave a comment