மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேய் ஊதி, * பொய்ச் சூதில் தோற்ற பொறை உடை மன்னர்க்காய், * பத்தூர் பெறாது அன்று பாரதம் கை செய்த, * அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்
சென்ற பதிகங்களில் யசோதை தன் மகன் கண்ணன், தன்னை அச்சோ அச்சோ என்று முன் பக்கத்திலும் முதுகிலும் கட்டி கொள்ளும் அனுபவங்களை, தன்னையே யசோதையாக பாவித்து ஆழ்வார் பாடிய பாடல்களை பார்த்தோம். இப்பொழுது சிறு பிள்ளைகள் அப்பூச்சி காட்டி விளையாடுவதை அனுபவிக்க வேண்டும் என்று அவதாரத்தின் மெய்ப்பாடு தோற்ற ஆழ்வார் பாடுகிறார். அப்பூச்சி காட்டுவது என்பது எதிரிகளுக்கு பயம் வரும் படி கண்களை இறுக்கி கொள்வது, முகத்தில் தலைமுடியை போட்டு மூடி கொள்வது போன்ற லீலைகளை செய்வது.
பெரியாழ்வார் திருமொழி 2.1.1
அனைவரும் கொண்டாடும்படி ஊதுகின்ற பாஞ்சன்னியத்தை இடது கையில் ஏந்தியவரும் நல்ல புல்லாங்குழலை ஊதுபவரும், சூதில் தங்களுடைய சொத்துக்களை இழந்த பொறுமைசாலிகளான பாண்டவர்களுக்கு தான் எல்லாவகையிலும் துணையாக இருந்து, அவர்களுக்கு பத்து கிராமங்களை கூட கிடைக்காமல் இருந்த அந்த காலத்தில் மகாபாரத போரில் அணி வகுத்து சென்ற அந்த பாண்டவ தூதன், அடியவர்களுக்கு பக்கம் பாரபக்ஷமாக நடந்து கொள்ளும் கண்ணன், பயங்கரமாக அப்பூச்சி காட்டி விளையாடுகிறான் என்று பாடுகிறார். அப்பூச்சி காட்டுவது என்பது பாலர்கள் தங்களை எதிர்க்கும் பாலர்களை பயம் காட்டுவதற்கு கண்ணை இறுத்துவது, இமைகளை மடக்கி காட்டுவது, மயிரால் முகத்தை மறைத்து காட்டுவது போன்ற சில சேஷ்ட்டிதங்கள் ஆகும்.
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தின் ஒலி பகைவர்கள் விழும்படியும் அடியவர்கள் வாழும்படியும் இருக்கிறது. இந்த அவதாரத்திற்கு ஏற்றபடி அனுகூலர் வாழும்படி புல்லாங்குழல் நல் இசை இசைக்கிறது. நல் இசையாவது, ‘நன் நரம்பு உடைய தும்பருவோடு நாரதரும் தம்தம் வீணை மறந்து‘, (பெரியாழ்வார் திருமொழி 3.6.5) ‘மரங்கள் மறந்து மது தாரைகள் பாயும்‘ (பெரியாழ்வார் திருமொழி 3.6.10)போன்றவை என்கிறார். பசு மேய்த்து திரியும் காலத்திலும் ‘ஆநிரை இனம் மீள குறித்த சங்கம்‘ (பெரியாழ்வார் திருமொழி 3.4.3) என்றும், ‘கேய தீங்குழல் ஊதிற்றும் நிரை மேய்த்தலும்‘ (திருவாய்மொழி 6.4.1) என்றும் சொல்வது இங்கே குறிப்பிடத்தக்கது.
அவனின் நீர்மையை கண்டு, ‘நம்மில் ஒருவன்’ என்று நினைப்பவர்கள் பயப்படும் படி ஈஸ்வர சின்னங்களை காட்டுதல். இந்த பாடலை உய்ந்த பிள்ளை பாடி அபிநயம் செய்யும் போது, உடையவர் பின்னே எம்பார் இருந்தார். ‘அத்தூதன்’ என்று பாடும்போது, எம்பெருமானை அபிநயம் காட்டுகிறார். ‘அப்பூச்சி’ என்று வரும்போது கண்களை இறுத்தி அபிநயம் செய்கிறார். அதனை கண்டு எம்பார் திருக் கைகளை திருத்தோள்களின் மேல் வைத்து காட்ட, அதனை புரிந்து கொண்ட உய்ந்த பிள்ளை, அப்படியே மாற்றி அபிநயம் செய்ய, உடையவர் கோவிந்தப் பெருமாள்’ (எம்பார்) இருந்தீரோ என்று கேட்டார் என்றும் அதன் விளக்கத்தை எம்பார் அருளி என்றும் ஐதீகம்.
Leave a comment