மூத்தவை காண முதுமணற் குன்றேறி, * கூத்து உவந்து ஆடிக் குழலால் இசைபாடி, * வாய்த்த மறையோர் வணங்க இமையவர், * ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான் எம்பிரான் என்னைப் புறம் புல்குவான்.
பெரியாழ்வார் 1.10.8
(வயதினாலும் வடிவாலும் மூத்த) இடை குல ஜன சபையானது (தன்னுடைய சேஷ்ட்டித ரஸங்களை) காணும்படி, உன்னதமான மணல் குன்றிலே ஏறி, வேய்ங் குழலாலே (முரளி) இசைகளை பாடிக் கொண்டும் உகப்பு தோன்ற நர்த்தனம் செய்து கொண்டும் தன்னை அடி ஒத்தின வைதிகமுனிகள் வணங்கும்படி தேவர்கள் ஸ்தோத்ரம் பண்ணும்படியாகவும், இப்படி கூத்தாடினவன் வந்து என்னை புறம் புல்குவான், எனக்கு ஸ்வாமியானவன் என்னை புறம் புல்குவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நிலவரையில் கிடந்த பெண்களும், (செய்யும் வேலைகளை) விட்டு வந்து காண்கைக்கு காரணமாகையால், இவன் உகந்து கூத்தாடி வாசிக்கிறான். திருப்பவளத்திலே வைத்து ஊதுகிற குழல் வழியே இசைகளை பாடி, தான் நினத்த பெண்களின் பெயர்களை சொல்லி அழைக்கவும், வெறுத்தவர்களை கால் கட்டி அவர்கள் பொறாமை கொள்ளவும் முதலிய சப்த விசேஷங்களை குழல் மூலம் வெளியிடுவது, இவனோடு பழகும் பெண்களுக்கு மட்டுமே தெரியும் என்கிறார். குழலால் இசை பாடி, கூத்து உவந்து ஆடி என்று கொள்ள வேண்டும். குழலால் விருப்பமானவரை அழைத்து அவர்கள் வந்ததால் உகந்து கூத்தாடியதை சொல்லி அனுபவிக்கிறார். ரிஷிகள் இந்த சேஷ்டிதங்களில் தோற்று, இவனை புகழ்கிறார்கள் என்றும், தேவர்கள் இத்தை கண்டு வியந்து ஸ்தோத்ரம் செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்.
கண்ணன் எல்லாரும் காணும்படி மிகவும் உயர்ந்த ஒரு மணல் குன்றின் மேல் ஏறி, நின்று தான் விரும்பின விதத்தில் புல்லாங்குழல் ஊதி, மிகவும் மனம் உவந்து கூத்தாடி இருக்கிறான். அவனுடைய லீலைகளை அனுபவித்து ரிஷிகளும் தேவர்களும் வணங்கப் பாடுகிறான் என்கிறார். இப்படிக் கூத்தாடின அழகோடு கண்ணன் வந்து என் முதுகினை கட்டி கொள்கிறான் என்று யசோதை பாடும் விதம் அமைந்த பாடல்.
Leave a comment