திவ்ய பிரபந்தம்

Home

1.10.7 பொத்த உரலைக் கவிழ்த்து

பொத்த உரலைக் கவிழ்த்து அதன் மேலேறி, * தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும், * மெத்தத் திரு வயிறார விழுங்கிய, * அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான் ஆழியான் என்னைப் புறம்புல்குவான்.

பெரியாழ்வார் திருமொழி 1.10.7

கீழ் பாகம் பொத்தலான உரலை (உறியின் கீழே) கவிழ்த்து அவ்வுரலின் மேல் ஏறி நின்று, பானையில் சேமித்து வைத்த மதுரமான திரட்டுபாலையும், நவநீதத்தையும் திருவயிரானது மிகவும் நிறையும்படி அமுது செய்த ஸ்வாமியானவன் வந்து என்னை புறம் புல்குவான்; விளையாட்டுகளில் மிகவும் ஆழ்ந்தவன் என்னை புறம் புல்குவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கண்ணன் தயிர் நெய் பால் முதலியவற்றை களவிலே உண்டு ஜீவிப்பதை சொல்கிறார். நல்ல உரல் என்றால் நடுவிலே மற்றவர்களும் தேடி வருவார்கள் என்பதால் பொத்தலான உரலை கண்ணன் இங்கே உபயோகிக்கிறான் என்கிறார். ஆழியான் என்பதால் விஷமங்களில் நாட்டம் உடையவன் என்பதும் கையில் ஆழியை ஏந்தியவன் என்பதும் சொல்லப்படுகிறது. ஆழியை உடையவன் என்பதால் சர்வ அதிகாரம் உள்ளவன் திடீர் என்று இப்படி கட்டி கொண்டான் என்கிறார்.

திருவாய்ப்பாடியில் உள்ளவர்கள் தயிர் நெய் பால் முதலியவற்றைக் கண்ணனுக்கு எட்டாதபடி உயரத்தில் உறிகளில் பாதுகாப்பாக வைக்க, அவற்றை கண்ணன் கண்டு பிடித்து, ஒன்றுக்கும் பயன் இல்லாத பழுதான உரலை உருட்டி கொண்டு போட்டு அதன் மேல் ஏறி, உறியில் உள்ள பால் தயிர் வெண்ணை இவற்றை விழுங்குவான்; அப்படி விஷமங்களில் ஆழ்ந்த கண்ணன் கைகளால் என்னை முதுகின் பக்கம் இருந்து கட்டி கொள்கிறான் என்று யசோதை பாடும் பாடலாக அமைந்து உள்ளது.

Leave a comment