சத்திரம் ஏந்தித் தனியொரு மாணியாய், * உத்தர வேதியில் நின்ற ஒருவனை * கத்திரியர் காணக் காணி முற்றும் கொண்ட, * பத்திரம் ஆகாரன் புறம் புல்குவான் பார் அளந்தான் என் புறம்புல்குவான்.
பெரியாழ்வார் திருமொழி 1.10.6
குடையை (கையில்) பிடித்துக் கொண்டு வேறு ஒரு உதவியும் இன்றி, (யஞ்ஞோபவிதமும், முஞ்சியும், என்று வேஷத்தாலும், வடிவழகாலும்) தனித்தன்மை கொண்ட ஒரே ஒரு பிரம்மச்சாரியாய், (யாகபூமியின் அருகே சென்று அங்கு) நின்ற, தானம் கொடுப்பதில் தனித்தன்மை வாய்ந்த மஹாபலியை, க்ஷத்ரியர்கள் (தங்கள் ராஜ்ஜியம் என்று நினத்துக்கொண்டு இருந்த) க்ஷத்ரியர்கள் காணும்படி பூமி முதலிய உலகங்கள் எல்லாவற்றையும் வாங்கி கொண்ட மங்களகரமான வடிவை உடையவன், புறம் புல்குவான், (முன்பு இரந்த) பூமியை திருவடிகளால் அளந்து கொண்டவன் என் புறம் புல்குவான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
குடையை கையில் பிடித்துகொண்டு தனி ஒருவனாய், யாகசாலையில் க்ஷத்ரியர்கள் பார்த்துக்கொண்டு இருக்க, உலகம் முழுவதையும் அளந்து தனக்கு என்று எடுத்துக்கொண்ட கண்ணன் என் முதுகினை கட்டி கொள்கிறான் என்று யசோதை பாடும் பாடலாக அமைந்தது.
‘புலங்கொள் மாணாய்,’ (திருவாய்மொழி 1.8.6) என்று சொல்லியபடி கண் முதலிய) இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற (மநோஹரமான) வாமந ப்ரம்மசாரி சேஷத்தை உடைய வடிவழகு படைத்தவன் என்பதை பத்திரம் ஆகாரன் என்கிறார்.
Leave a comment